பஞ்சாப் முகநூல்
இந்தியா

பஞ்சாப்|பொற்கோயிலில் புகுந்து இரும்பு கம்பியால் பக்தர்களை தாக்கிய மர்மநபர்!

அமிர்தசரஸில் பொற்கோயிலில் தாக்குதல்: மர்மநபர் மற்றும் அவருடன் வந்த உதவியாளரும் கைது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் புகுந்து, மர்மநபர் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக சமையலறைக்கு அருகிலுள்ள மிகப் பழமையான குரு ராம் தாஸ் விடுதிக்குள் இந்தத் தாக்குதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 பக்தர்களும், 2 சேவகர்களும் காயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த பதிண்டாவைச் சேர்ந்த ஒரு சீக்கிய இளைஞரின் நிலை மோசமாக இருப்பதாகவும், தற்போது அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்திய நபருடன் வந்த இரண்டாவது குற்றவாளி உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தாக்குதல் நடத்திய ஒரு நபரையும், அவருடன் வந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் எதற்காக தாக்குதல் நடத்தினார் எனவும், அவர் யார் எனவும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு, இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனவும், காவல் துறையினர் இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.