மம்தா பானர்ஜி PTI
இந்தியா

மம்தாவுக்கு ஏற்பட்ட கால்முறிவு உண்மையில்லை.. சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு.. 2021-ல் நடந்தது என்ன?

5 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான சர்ச்சை மீண்டும் மேற்கு வங்க அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Premkumar S

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியமைத்த மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் ஆட்சியை இழந்திருக்கிறார். அதேபோல, பல்வேறு உட்கட்சிப் பூசல்களால் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுப் பட்டிருக்கிறது. இதற்கிடையில், நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இடைத்தேர்தல் பரப்புரையில், பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட கால் காயம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியிருக்கிறார். மேலும், இதுதொடர்பான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுவேந்து அதிகாரி

2021ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி, நந்திகிராமில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சிலர் தன்னைத் தள்ளி, காரின் கதவை காலில் மோதியதால் காயம் ஏற்பட்டதாக அப்போது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நடைபெற்ற தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதேசமயம், பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.

இந்நிலையில் தான், அந்த காயம் குறித்து தற்போது மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது தவறான தகவல் என்றும், அவர் காயத்தை அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக, 2021ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பாங்கூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசயின்சஸ் (Bangur Institute of Neurosciences) வெளியிட்டதாகக் கூறப்படும் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில், எலும்பு முறிவு அல்லது எலும்பு இடப்பெயர்வுக்கான ஆதாரம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநில CID ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாகவும், அக்டோபர் 9ஆம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநில அரசு புதிய விசாரணையைத் தொடங்கும் என்றும் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

ஆனால், சுவேந்து அதிகாரியின் குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு மறுத்துள்ளது. மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் உண்மையானது என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களே அதன் தீவிரத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த காயம் தொடர்பான சர்ச்சை மீண்டும் மேற்கு வங்க அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.