இந்தியா

பாஜகவின் இன்னல்களை எதிர்த்து அயராது போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி

பாஜகவின் இன்னல்களை எதிர்த்து அயராது போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி

JustinDurai
'இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் வேளாண் சட்டங்கள் ரத்து' எனத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், ''பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், ''வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவின் பொருள் பா.ஜ.க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.
இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா.ஜ.க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.