திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே பொதுவெளியில் வெடித்த சண்டையே, கட்சியினுள் எழுந்த பூசலுக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் மனு சமர்ப்பிக்க சென்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனைவரும் ஒன்றாக இணைந்து மனுவை சமர்பிக்கலாம் என தெரிவித்த கல்யாண் பானர்ஜி, நேரடியாக தேர்தல் ஆணையம் சென்றதாகவும், தன்னிடம் கையெழுத்து பெறவில்லை எனவும் மஹுவா மொய்த்ரா குற்றஞ்சாட்டியதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்யாண் பானர்ஜியை கைது செய்யக்கூறி பாதுகாப்பு படையினரிடம் மஹுவா மொய்த்ரா புகாரளித்தார். இதனால் கடும் கோபமடைந்த கல்யாண் பானர்ஜி தேர்தல் ஆணைய அலுவலகத்திலேயே மொய்த்ராவை கண்டித்தார். நிலைமை இப்படி இருக்க, கட்சியில் எழுந்த சலசலப்பு தொடர்பான தகவல்கள், பிற உறுப்பினர்கள் வழியே தன்னை வந்தடைவது மம்தாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
மோதலுக்குப் பிறகான எம்.பி.க்களின் வாட்ஸ்-அப் சாட், சர்ச்சையை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகியோர் பரிமாறிக்கொண்ட வாட்ஸ்அப் தகவல்கள் பொதுவெளியில் கசிந்து, கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சௌகதா ராய், கட்சியின் மக்களவை கொறடா பொறுப்பிலிருந்து கல்யாண் பானர்ஜியை உடனடியாக நீக்க வேண்டும் என பேசினார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி, மம்தா சொன்னால், ராஜினாமா செய்யவும் தான் தயார் என பகிரங்கமாக அறிவித்தார்.
மஹுவா மொய்த்ரா ஏற்கனவே ஒரு தொழிலதிபரை தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை பயன்படுத்த அனுமதித்த சர்ச்சை இன்னும் தொடரும் நிலையில், மம்தா பானர்ஜி அவரை எச்சரித்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். அதேசமயம், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் மஹுவா மொய்த்ரா மீது தவறு இல்லை எனவும், கல்யாண் பானர்ஜி அதிக உணர்ச்சிவசப்படுகிறார் எனவும் மம்தாவிடம் தெரிவித்துள்ளனர். இப்படி உட்கட்சி பூசல் முழு வீச்சாக வெடித்துள்ளது மம்தா பானர்ஜிக்கு புதிய தலைவலி என்றும், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தகைய மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை எனவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.