தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டத்திலும், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் தான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
அதன்படி நேற்று நாடியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், தமிழக முதலவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் "மறைமுக அல்லது ரகசிய உடன்பாடு" வைத்துள்ளனர் என கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்த திறமையான அதிகாரிகள் திட்டமிட்டுத் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் சாடினார். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை பாஜக அமர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாடு தழுவிய எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக, தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.