அமெரிக்கா - இந்தியா இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க-இந்தியா டிரஸ்ட் ஃபெலோஷிப் (ஆராய்ச்சி உதவித்தொகை)) திட்டத்தில், மணிப்பால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் எனப்படும் MAHE உயர்கல்வி நிறுவனம், இந்தியாவின் ஹோஸ்ட் நிறுவனங்களில் ஒன்றாக இணைந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த போஸ்ட்-டாக்டரல் (Post-doctoral) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் பேராசிரியர்களை இந்தியாவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அழைக்கும் நோக்கில், 12 மாத கால சிறப்பு ஃபெல்லோஷிப் (ஆராய்ச்சி உதவித்தொகை) திட்டத்தை அமெரிக்க தூதரகம், சென்னை ஐ.ஐ.டி. (IIT Madras) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் கவனம் செலுத்தும் எனவும் இந்தியாவிற்கு இதற்குமுன் வராத அமெரிக்கக் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில்தான், இந்தத் திட்டத்தின் தொடக்கவிழா நேற்று இரவு (செப்டம்பர் 6) பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கலந்துகொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியை நடத்தும் மூன்று நிறுவனங்களான மணிப்பால் உயர் கல்வி நிறுவனம் (MAHE), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT மெட்ராஸ்) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) பெங்களூரு ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மணிப்பால் கல்வி உயர் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சரத் கே. ராவ், அமெரிக்க - இந்தியா டிரஸ்ட் ஃபெலோஷிப்-ல் மணிப்பால் உயர்கல்வி நிறுவனம் இணைவதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.