\
Let us examine in detail why the Sarkaria Commission  final outcome
Model ImageChat Gpt

50 வருடங்களாக தொடரும் சர்ச்சை.. சர்க்காரியா ஆணையம் என்றால் என்ன? இறுதியில் அது என்ன ஆனது?

சர்க்காரியா கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது? இறுதியில் என்ன ஆனது என்று விரிவாக பார்க்கலாம்.
Published on

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சர்க்காரியா கமிஷன் விசாரணை பற்றி காலம் காலமாக பேசப்பட்டுவரும் நிலையில், அது எதற்காக அமைக்கப்பட்டது? இறுதியில் என்ன ஆனது என்று விரிவாக பார்க்கலாம்.

திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரமும் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் இணைந்து அப்போதைய குடியரசுத் தலைவர் விவி கிரியை சந்தித்து திமுக அரசின் ஊழல்கள் என 32 பக்கங்கள் நிரம்பிய புகார் பட்டியலை அளித்தனர். அந்தப் புகார் பட்டியல் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பப்பட, அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பதில் அளித்த நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறு புத்தகமாகவும் வெளியிட்டார். அதன் பின்னர் இந்த விவகாரத்தில், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தச் சூழலில், 1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் மத்திய அரசிடம் கொடுத்த புகார்களை விசாரிக்க 1976-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

Indira Gandhi
Indira Gandhi ANI

சர்க்காரியா ஆணையம் திமுக மீது முன்வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியது. இறுதியில் அதில் 7 குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும், பிற குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறி சர்க்காரியா ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில்தான் விஞ்ஞான ஊழல் என குறிப்பிடப்பட்டதாக தற்போது வரை விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையில் அப்படி எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்காரியா ஆணையம் அளித்த இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தும் அதிகாரம் சிபிஐக்கு வழங்கப்பட்டது. அதன்படி 1977-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நீதிமன்றத்தின் விசாரணையின்போது திமுக மீதான புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் இந்த புகாரை எழுப்பியதாகவும் எம்.ஜி.ஆர் அறிக்கை அளித்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த குற்றசாட்டுகளை நிரூபிக்க சிபிஐ கடுமையாக திணறியுள்ளது.

cbi
cbiPTI

இந்தச் சூழலில் 1977-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1979-ஆம் ஆண்டு அதிமுக ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றது. இதனால் திமுக மீதான சிபிஐ விசாரணை வேகம் எடுத்த நிலையில், 1980-இல் ஜனதா கட்சி மத்தியில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

1980-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், திமுக இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. திமுக - இந்தியா காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றதோடு, மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது. இதன் பின்னர் சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை மீதான விசாரணை தொய்வடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களையோ அல்லது உறுதியான சாட்சியங்களையோ சிபிஐயால் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியவில்லை. இதனால் அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் விளைவாக, சிறப்பு நீதிமன்றங்களில் திமுக மீது போடப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியாகக் கைவிடப்பட்டன.

அதன்பின்னர் 1984-ஆம் ஆண்டு அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சூழலில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சர்க்காரியா ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் தற்போது வரை நிரூபிக்கப்படாத வெறும் குற்றசாட்டுகளாகவே உள்ளது.

Let us examine in detail why the Sarkaria Commission  final outcome
முதலில் EV வேலு, தற்போது KN நேரு | திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு குறி : காலையிலேயே பெரும் பரபரப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com