மராத்திய மண்ணின் முகமாக அறியப்பட்டவர் மறைந்த சிவசேனா தலைவர், பால் தாக்கரே. அவர் தொடங்கிய சிவசேனா, இன்று உடைந்து கிடக்கிறது. எனினும், அன்றைய ஒன்றுபட்ட சிவசேனாவில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, தம்பி மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல இரு சகோதரர்கள் இடையே அரசியல் பயணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2005ஆம் ஆண்டு ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகினார்.
சிவசேனாவில் இருந்து விலகிய பிறகு, அதற்கு உத்தவ் தாக்கரேதான் காரணம் என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டினார். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை அவர் தொடங்கினார். அன்று முதல் சிவசேனாவும், நவநிர்மாண் சேனாவும் எதிரும்புதிருமாக உள்ளன. உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவையும் ஏக்நாத் ஷிண்டே உடைத்தார்.
இதனால், உத்தவ் சிவசேனா, நவநிர்மாண் சேனா ஆகியன தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கும்போது பிரிந்த தாக்கரே சகோதரர்கள் ஒன்றுசேர வேண்டும் என குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், அதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்வது இல்லை. இந்த நிலையில், ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே அரசியலில் பின்னடவை சந்தித்து வரும் நிலையில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என மீண்டும் குரல்கள் ஒலிக்க தொடங்கின.
மேலும் சமீபகாலமாக உத்தவ், ராஜ் தாக்கரே குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதைக் காண முடிந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மராட்டிய அரசு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயம் ஆக்கியது. இதற்கு ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உத்தவ் தாக்கரேவும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் 2 பேரும் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ராஜ் தாக்கரே, ”உத்தவ்வுக்கும் எனக்கும் இடையேயான சச்சரவுகளும் சண்டைகளும் சிறியவை. ஆனால் பிரச்னை அதையெல்லாம் விடப் பெரிது. எனக்கு மராட்டிய மாநிலத்தின் நலன்தான் முக்கியம். அதற்குமுன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம்தான். அதற்காக சின்னசின்ன பிரச்னைகளை தள்ளி வைத்துவிட்டு உத்தவ் தாக்கரே உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்" என கேட்டிருந்தார்.
இதையடுத்து பேசிய உத்தவ் தாக்கரே, "சின்னசின்ன சச்சரவுகளை ஒதுக்கி வைக்க நானும் தயாராய் இருக்கிறேன். மராத்தி மொழி மற்றும் மராட்டிய மாநில நலனுக்காக சின்ன பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ராஜ் உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்” என்று கூறி இருந்தார்.
உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரேவின் இந்த திடீர் மனமாற்றம் காரணமாக அவர்களின் 20 ஆண்டுகால அரசியல் பகை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, அவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் அக்டோபரில் நடைபெற இருக்கும் பிருஹன் மும்பை மாநகராட்சிக்கான தேர்தல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்பட்டால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், “அவர்கள் இருவரும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இணைவதில் யாரும் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் சச்சரவுகள் முடிவுக்கு வந்தால் அது ஒரு நல்ல விஷயம். இருப்பினும், வரவிருக்கும் பி.எம்.சி தேர்தலில் அவர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, "உத்தவ் தாக்கரேவுடன் கைகோர்ப்பதா இல்லையா என்பது ராஜ் தாக்கரேவின் முடிவு. அவர் தனது கட்சியின் எதிர்காலத்தை முடிவு செய்யலாம். பாஜகவுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார்.
உத்தவ் தாக்கரேவின் சேனாவின் கூட்டாளியான காங்கிரஸுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. சரத் பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்பியுமான சுப்ரியா சுலேவும் தாக்கரேவின் இணைவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், கடந்த வாரம் ராஜ் தாக்கரேவின் வீட்டிற்குச் சென்ற துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிஎம்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்த சலசலப்பைத் தூண்டியுள்ளார். ஆனால் அது குறித்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதனால், சகோதரர்கள் இணைவதில் அவருக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது.