மகாராஷ்டிராவில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக நீண்டகாலம் பிரிந்திருந்த ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரே சகோதரர்கள் தற்போது இணைந்துள்ளனர். இதனால், அவர்கள் காங்கிரஸ், தேசியவாதி காங்கிரஸ் கட்சிகளை கழற்றிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 288 உள்ளாட்சி இடங்களில், பாஜக கூட்டணி 207 இடங்களில் வெற்றிபெற்று வாகை சூடியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலை கோட்டை விட்ட உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பலம் வாய்ந்த மாநகராட்சித் தேர்தல் வெற்றியைப் பெற முயற்சித்து வருகிறது.
அதற்காக தன்னுடைய சகோதரர் ராஜ்தாக்கரேவுடன் இணைந்து இத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பாஜகவை தோற்கடிப்பதற்காக அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கழற்றிவிடவும் இந்தச் சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிவசேனாவின் ஒட்டு வங்கி அப்படியே பாஜக பக்கம் திரும்பி இருப்பதால், அதைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்த முடிவை இருவரும் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 20 ஆண்டுகால பகையை மறந்து மும்பை மாநகராட்சி தேர்தலை ராஜ் தாக்கரேவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே சந்திக்கவுள்ளார். இதற்காக மொத்தம் உள்ள 227 வார்டுகளில், 157இல் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், எஞ்சிய 70 தொகுதிகளில் ராஜ் தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் களிமிறங்கவுள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும் அது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மட்டுமே செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மாநில அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் எனவும், மூன்றாவது மொழியாக அதனை கற்பிக்க வேண்டுமென அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றிணைந்து பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, மொழி விஷயத்தில் பாஜக அரசு பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சுயேட்சையாகப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது.