வேகத்தடை - ஆம்புலன்ஸ் கோப்புப்படம்
இந்தியா

மகாராஷ்ட்ரா: ‘இறந்துவிட்டார்’ என்ற மருத்துவர்... வேகத்தடையால் நிகழ்ந்த அதிசயம்!

இறந்துவிட்டார் என்று மருத்துவரே சொன்ன ஒருவர் மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்றால் நிச்சயம் அது அதிசயம்தானே. அப்படியொரு அதிசயம்தான் மகாராஷ்ட்ராவில் நடந்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்...

Rajakannan K

பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தால் நிச்சயமாக அந்த கணத்தை நம்பவே முடியவில்லை. ஒரு கணம் தங்களுடைய உடலை கிள்ளி கூட பார்த்திருப்பார்கள். ஆம், இறந்துவிட்டார் என்று மருத்துவரே சொன்ன ஒருவர் மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்றால் நிச்சயம் அது அதிசயம்தானே. நிச்சயம் அது ஒரு மெடிக்கல் மிராக்கிள்தான். சரி, என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.

“நாங்கள் ஒரு நிமிடம் திகைச்சு நின்னுட்டோம். உடனே எங்கள் வாகனத்தை மருத்துவமனையை நோக்கி திருப்பிச் சென்றோம். மருத்துவர்களும் உடனடியாக உதவி செய்தார்கள். இப்போது என்னுடைய தாத்தா உயிருடன் இருக்கிறார்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் உல்பேவின் பேரன் ஓம்கார் ரமனே.

ஆம்புலன்ஸ்

இந்த சம்பவம் டிசம்பர் 16 ஆம் தேதி மகாராஷ்ட்ராவில் நடைபெற்றது. அவர்கள் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, தன்னுடைய விவசாய நிலத்தில் வேலைகளை முடித்துவிட்டு அன்று வீடு திரும்பியிருக்கிறார் உல்பே. அப்போது அவருக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. அத்துடன் உடல்நிலை மிகவும் சோர்வுற்று அவரால் நிலையாக நிற்க முடியவில்லை. உடனடியாக காஸ்பா பவ்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

உல்பே-வை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். அத்துடன், உடனடியாக மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தியிருக்கார் அந்த மருத்துவர். அந்த மருத்துவமனையில் இருக்கும்போதும் அவர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அங்கு அவருக்கு இசிஜி-ம் எடுக்கப்பட்டது. பின், “நாங்கள் எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் அவர் இறந்துவிட்டார்” என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ்

பின்னர், மருத்துவமனையில் செலுத்த வேண்டிய தொகை எல்லாவற்றையும் செலுத்திவிட்டு மருத்துவமனையில் இருந்து உடலை அடக்கம் செய்யும் முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்கள் உல்பேவின் குடும்பத்தினர். தங்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் உல்பே இறந்துவிட்டார் என்ற செய்தியையும் தெரிவித்து இருக்கிறார்கள். இறுதி சடங்கிற்காக ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். பின்னர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை வீட்டிற்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது செல்லும் வழியில் திடீரென ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்பீட் பிரேக்கரில் சட்டென்று நின்றுள்ளது. வாகனம் ஒரு குலுங்கு குலுங்கி இருக்கிறது. அப்போது அவரது கை லேசாக அசைந்துள்ளதை வாகனத்தில் இருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். உறவினர்களில் ஒருவர் அவரது மணிக்கட்டை தொட்டு பார்த்தபோது உயிர்நாடி இருப்பதை உணர முடிந்திருக்கிறது. உடனடியாக வாகனத்தை மருத்துவமனைக்கு திருப்பி இருக்கிறார்கள். முதலில் ஒரு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு இருக்கைகள் இல்லாமல் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில்தான் இரண்டு நாட்கள் திக் திக் என இருந்து நல்ல செய்தி அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது.

cardiopulmonary resuscitation - CPR

காரணம், அங்கு உல்பேவை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “அவர் மிகவும் மோசமான உடல்நிலையுடன்தான் இருந்தார். உடனடியாக அவரை வெண்டிலேட்டரில் வைத்தோம். பின்னர் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்காக cardiopulmonary resuscitation (CPR எனப்படும் அவசர சிகிச்சை) முறையை செய்தோம். மீண்டும் அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டதில் அவரது இதயத்தில் பிளாக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்தோம். இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு வந்தார்” என்று தெரிவித்தனர்.

டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டுரங் உல்பே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். அதன்பிறகே இந்த தகவல் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வந்துள்ளது. அவர் இறந்துவிட்டார் என்று சொன்ன மருத்துவர் மற்றும் அந்த மருத்துவமனையின் பெயரை சொல்ல அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

வேகத்தடை

இருப்பினும், மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்யாமல் உடனடியாக இறப்பினை அறிவிக்க கூடாது என்றும் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கோல்ஹாபுர் முனிஷிப கார்பரேஷ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.