மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கு இன்னும் விடை தெரியாத நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி பதவியேற்புக்கான விழா ஏற்பாடுகள் மட்டும் மும்பை ஆசாத் மைதானத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் முதல்வர் ரேஸில் உள்ள தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகிய மூவருமே வெவ்வேறு நகரங்களில் உள்ளனர். உடல்நிலை காரணமாக, ஷிண்டே தனது சொந்த ஊரில் உள்ளார். தனிப்பட்ட பயணமாக அஜித் பவார் டெல்லி சென்றுள்ளார். இதற்கிடையே, பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வேறு இன்று நடைபெற்றது. இதில் தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளையில், இதைத் தாமதப்படுத்துவதில் பாஜகவே முதன்மையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ”ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதாகவும், அவரது அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வது பாஜகவின் கையில்தான் உள்ளது” என்றும் சிவசேனா தலைவர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார். அவர், “சிவசேனாவை யார் உண்மையில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை எங்கள் தலைவர் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். இப்போது டெல்லிதான், பாஜக தலைமை தனது அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார். அதாவது, ”முதல்வர் தேர்வில் பிரதமர் எடுப்பதே இறுதி முடிவு” என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததை அவர் நினைவுபடுத்துகிறார். அதாவது, தங்கள் தரப்பில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர், “தாமதத்திற்கு ஷிண்டே பொறுப்பல்ல. பாஜகவின் உள்தேர்வு செயல்முறை அவர்களின் விஷயம். அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாக ஷிண்டே ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். எனினும், மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்க வேண்டும். இது இயல்பானது. இதனால், யாரோ வருத்தப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை. அதேநேரத்தில், கூட்டணி உறுதியாக ஒன்றுபட்டுள்ளது" என தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார். மேலும், ”மகாயுதி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்து ஷிண்டே நாளை முடிவு செய்வார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஏக்நாத் மற்றும் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க ஏக்நாத் ஷிண்டே தயாராக இல்லை எனவும், அந்தப் பதவியை தனது மகனுக்கு வழங்கவும் அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சிவசேனா முக்கியமாக உள்துறை அமைச்சகத்துக்கு குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை பாஜக கொடுக்க மறுக்கிறது. இதன்காரணமாகவே, முதல்வர் ரேஸில் தாமதம் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “பிஜேபிக்கு அதிகமான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும், முந்தைய அரசாங்கத்தில் ஷிண்டேவின் கீழ் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராகப் பணியாற்றினார். அதுபோலவே இந்த ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் பதவியை ஏற்கவேண்டும். ஒருவேளை, அவர் அந்தப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், மகாயுதி கூட்டணிக்கு தலைவராகப் பொறுப்பேற்கலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும், முதல்வர் அறிவிக்காத பாஜக கூட்டணியை உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா (யுபிடி) சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரே, "இந்த எண்ணிக்கையில் பலம் இருந்தும், அவர்களால் இன்னும் மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை; நமது மகாராஷ்டிரா அவர்களுக்கு முக்கியமல்ல என்பதால், மகாராஷ்டிராவைப் புறக்கணிக்கவும், தொடர்ந்து மகாராஷ்டிராவை அவமதித்து, அரசாங்கத்தை அமைப்பதை நிலுவையில் வைக்கவும். மற்ற எல்லா விஷயங்களையும் செய்ய அவர்களுக்கு நேரம் இருக்கிறது. ஆனால் டெல்லிக்கு நமது மகாராஷ்டிரா, நமது மாநிலம் முக்கியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.