நிதிஷ் ரானே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | ஹாலால்-க்கு மாற்றாக ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்.. வெடிக்கும் சர்ச்சை!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்சிக் கடைகளை அடையாளம் காணும் வகையில் அந்தக் கடைகளுக்கு 'மல்ஹார்' சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநில மீன் வளத்துறை அமைச்சர் நிதிஷ் ரானே அறிவித்து அதனைத் தொடங்கியும் வைத்துள்ளார்.

மேலும், ”இந்துக்கள் 'மல்ஹர்' சான்றிதழ் இல்லாத கடைகளில் இறைச்சி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”இதன் மூலமாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இந்தக் கடைகளை எளிதாக அடையாளம் காண முடியும். இந்துக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் ஆட்டிறைச்சி சுத்தமாக இருக்கும், இந்துக்களின் பொருளாதாரமும் மேம்படும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே இது சமூகத்தை பிளவுபடுத்தும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும், உணவுத் தேர்வுகளில் அரசாங்கத்தின் தலையீடு குறித்த கவலைகள் காரணமாக பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு இந்த முயற்சியை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை.

"இது ஒரு அதிகாரப்பூர்வ அரசாங்கத் திட்டம் என்றால், முதல்வர் ஏன் இதைத் தொடங்கவில்லை? இந்த சான்றிதழ் நிறுவனத்தின் உரிமையாளர் யார்" என NCP (சரத் பவார் பிரிவு) தலைவர் ரோஹித் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். ”இந்து - முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும்” என காங்கிரஸ் எம்எல்ஏ நானா படேல் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ சஞ்சய் உபாத்யாயா, ”முஸ்லீம்கள் விற்கும் 'ஹலால்' இறைச்சியில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனைத் தடுக்கவே, இந்துக்களுக்கு என்று பிரத்யேக கடைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். அமைச்சரின் முடிவை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

model image

ஜட்கா என்பது என்ன?

'மல்ஹார்’ சான்றிதழ் என்பது 'ஜட்கா' (Jhatka) ஆட்டிறைச்சியை விற்கும் கடைக்காரர்களுக்கானது. சாதாரண மக்களின் வார்த்தைகளில், 'ஜட்கா' (இந்தியில் வேகம் என்று பொருள்) என்பது இஸ்லாமியம் அல்லாத ஒரு முறையாகும். ஜட்கா முறை என்பது சீக்கிய சமயத்தவரால் வாள் அல்லது கோடரியால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியாகும்.

இதில் ஒரே வெட்டில் விலங்கு கொல்லப்படுவதால் அந்த விலங்குக்கு வலி தெரிவதற்கு முன்பே இறந்துவிடும். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக இந்த முறையை விரும்புகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இறைச்சிகள் சுத்தமாக, கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். வேறு இறைச்சிகளின் கலப்படம் இருக்கக்கூடாது. ஜட்கா முறையை ஆதரிப்பவர்கள், விலங்கு நீண்ட துன்பம் இல்லாமல் உடனடியாகக் கொல்லப்படுவதால், இது மிகவும் நெறிமுறை சார்ந்த நடைமுறை என்று வாதிடுகின்றனர். அந்த வகையில், அமைச்சர் நிதிஷ் ரானே விளம்பரப்படுத்திய ’மல்ஹார் சான்றிதழ்.காம்’ என்பது காதிக் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களால் மட்டுமே இயக்கப்படும் 'ஜட்கா' இறைச்சி விநியோகிப்பாளர்களுக்கான ஒரு பிரத்யேக தளமாகும்.

model image

ஹலால் என்பது என்ன?

மறுபுறம், 'ஹலால்' என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும்போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையாக அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்குச் செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இப்படி, இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது என்றும், ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.