கேரளாவில் கடந்த மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடெங்கும் பெய்யத் தொடங்கியுள்ளது. மும்பையில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 13.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மே மாதத்தில் இவ்வளவு மழை பதிவாவது கடந்த 107 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். மேலும் மும்பையில் 70 ஆண்டுகளில் முதல்முறையாக 2 வாரங்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. ரயில், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 250 விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தாமதமாகியுள்ளது. மும்பையில் இன்னும் 2 நாளைக்கு பலத்த காற்றுடன் கனமழை பொழியும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. புனே உள்ளிட்ட நகரங்களிலும் பருவமழை எடுத்த எடுப்பிலேயே வலுக்கத்தொடங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியிலும் இடி மின்னலுடன் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 4 மணி நேரங்களில் 8 சென்டி மீட்டர் அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. கர்நாடகாவிலும் பல பகுதிகளில் பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. பெலகாவி நகரில் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது சிறுமி உயிரிழந்தாள். இம்மாநிலத்தில் மழை பாதிப்புக்கு 3 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் வட பகுதிகளிலும் பருவ மழையின் வீச்சு தீவிரமாக உள்ளது. பல இடங்களில் மரங்கள் பெயர்ந்து சாலைகளில் வீழ்ந்துள்ளன. அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.