டெல்லியில் பலத்த காற்று.. கனமழை.. விமானச் சேவை பாதிப்பு!
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால், தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் மணிக்கு 82 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், 81.2 மிமீ மழை பெய்ததாகவும் நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், இந்த மோசமான வானிலை ஏற்பட்டது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சாலைகளின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தவிர, வீதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோதி பாக், மின்டோ சாலை, டெல்லி கண்டோன்மென்ட் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மார்க் ஆகிய இடங்களில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) விமானச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.