தேவேந்திர ஃபட்னாவிஸ் x page
இந்தியா

மகாராஷ்டிரா | ‘லவ் ஜிகாத்’ சட்டம் கொண்டுவர முடிவு.. குழுவை நியமித்த அரசு!

மகாராஷ்டிராவிலும் ‘லவ் ஜிகாத்’ சட்டம் கொண்டுவரும் நோக்கில், 7 பேர் கொண்ட குழுவை, அம்மாநில அரசு அமைத்துள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், கூட்டணி கட்சித் தலைவர்களான சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவிலும் லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லவ் ஜிகாத் தொடர்பான சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் கொண்ட இந்த குழுவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி, சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி, சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரி, சமூக நீதி மற்றும் சிறப்பு உதவித்துறை அதிகாரி, உள்துறைத் துறையைச் சேர்ந்த அதிகாரி என ஏழு பேர் இடம்பெற்றுள்ளனர்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்

இந்த குழுவை அமைத்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அம்மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மங்கள் பிரபாத் லோதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “லவ் ஜிஹாத் ஒரு தீவிரமான பிரச்னை, மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக மாநில அரசு செயல்பட்டு வருகிறது”என தெரிவித்துள்ள அவர், லவ் ஜிஹாத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். என்றாலும், இந்தக் குழுவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவை எம்.பி.யும் என்.சி.பி (சரத்சந்திர பவார்) செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ”அரசாங்கம் காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றைவிட பொருளாதார பிரச்னைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், முழு நாடும் பாதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகத்தினரை, மற்ற சமூகத்தினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பாஜக தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மதமாற்றங்கள் செய்பவர்களை லவ் ஜிகாத் என்று பாஜக கூறி வருகிறது. அதனை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

model image

திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2021இல் தெரிவித்திருந்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டமன்றம், மிரட்டல் அல்லது திருமண வாக்குறுதியின்கீழ் ஒரு நபரை மதம் மாற்றினால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் விதிகளைக் கொண்ட சட்டவிரோத மத மாற்றத் தடை (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.