மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பணி நேரம் குறித்து பேச்சுகளும், கருத்துகளும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், தனியார் நிறுவனங்களில் பணி நேரம் மாநில அரசால் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மாநில தொழிலாளர் துறையின் முதன்மைச் செயலாளர் இட்ஜெஸ் குண்டன், இந்த மாற்றங்களை தொழிலாளர் மற்றும் தொழில்களுக்கு ஆதரவானதாகக் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கை, மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.
மேலும், 20க்கும் குறைவான தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இனி மாநில தொழிலாளர் துறையிடமிருந்து பதிவுச் சான்றிதழ் (குமாஸ்டா உரிமம் என அழைக்கப்படுகிறது) தேவையில்லை என்றும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து அதிகாரிகளுக்கு ஓர் எளிய அறிவிப்பின் மூலம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இது தனியார் நிறுவனங்களிடையே இணக்கமின்மை குறித்த அச்சத்தை நீக்கி, வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய விதிகள் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, கடைகள் மற்றும் ஐடி மற்றும் ஹோட்டல்கள் போன்ற தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்று மாநில தொழிலாளர் செயலாளர் ஐ. குண்டன் தெரிவித்துள்ளார். கூடுதல் நேரம் உட்பட மொத்த வாராந்திர வேலை நேரம் 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேரத்திற்கு தொழிலாளர் ஒப்புதல் தேவை. திருத்தங்கள் இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் சட்டமன்ற ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும், தொழிலாளர் சங்கங்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் தலைவர் அஜித் அபயங்கர், ”12 மணி நேர ஷிப்ட் விதி மூன்று நாட்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை நீக்குகிறது. தொழிலாளர்களின் வருமானத்தைக் குறைக்கிறது. பணிச்சுமையை அதிகரிப்பதன் மூலமோ அல்லது செலவு குறைந்த இரவு நேர நடவடிக்கைகளுக்கு மாறுவதன் மூலமோ முதலாளிகள் நெகிழ்வுத்தன்மையை தவறாகப் பயன்படுத்தலாம், இது தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இதேபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ள கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களுடன் மகாராஷ்டிராவும் தற்போது இணைந்துள்ளது.