மகாராஷ்டிராவில், ‘சர்வஜனிக் கணேஷ் உத்சவ்’ என்ற பெயரிலான விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இது மாநில விழாவாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்டிர கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்துத்துவ அஸ்திரமாக ஆக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் இப்போது அடுத்தகட்டம் நோக்கி நகர்த்தப்படுகின்றன என்று இதைச் சுட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
‘சர்வஜனிக் கணேஷ் உத்சவ்’ என்று சொல்லப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 1893இல் பால கங்காதர திலகரால் மகாராஷ்டிரத்தில் தொடங்கப்பட்டது. பாரம்பரியமாக வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை ஒரு பெரிய சமூக நிகழ்வாக மாற்றிய திலகர், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியர்களைத் திரட்ட ஒரு தேசியவாத நிகழ்ச்சியாக இதை வளர்த்தெடுத்தார். பிற்பாடு இதை இந்துத்துவ இயக்கங்கள் கையில் எடுத்தபோது, இந்து பெருமிதத்தின் அடையாளமாகவும், இந்துத்துவ அணி திரட்டலாகவும் மாற்றி அமைத்தன. மகாராஷ்டிர மாநிலத்துக்குள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்துத்துவத்தை எடுத்துச் செல்லும் வாகனமாக விநாயகர் ஊர்வலங்களை மாற்றின.
முன்னதாக, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதை இப்போது சுட்டிக்காட்டும் பாஜக அரசு இனி விநாயகருக்கு எந்த தடையும் இல்லை என்று பேசுகிறது. மேலும், இந்த முறை விநாயகர் ஊர்வலங்களைத் திட்டமிடுபவர்கள் ஆயுதப் படைகளை கவுரவிப்பது, ஆப்பரேஷன் சிந்தூர் போன்ற ராணுவ நடவடிக்கைகளை நினைவூட்டுவது ஆகிய கருப்பொருள்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது!
மஹாராஷ்டிரத்தில், இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான மராத்தி அரசியலை தாக்கரே சகோதரர்கள் கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர் அரசியலை முன்னெடுக்க வேண்டிய அழுத்தத்தை மஹாராஷ்டிர பாஜக இப்போது எதிர்கொள்கிறது. அதன் வெளிப்பாடு போன்றே ‘சர்வஜனிக் கணேஷ் உத்ச’வுக்கு அரசு நிகழ்வு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.