மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. கடந்த வாரம், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்தும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜி நகர் (2023இல் மகாராஷ்டிரத்தின் ஒளரங்காபாத் மாவட்டத்துக்கு சத்ரபதி சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றப்பட்டது) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணித் தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக எம்பிக்கள் நவநீத் ராணா, உதயன்ராஜ் போஸ்லே ஆகியோர் ஒளரங்கசீபின் சமாதி அகற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டச் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது. இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும்” என்றார்.
கடந்த வாரம், ஆர்எஸ்எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி, மும்பையில் உள்ள அனைவருக்கும் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது சர்ச்சை ஆனது. இதை வைத்து மகராஷ்டிர எதிர்க்கட்சிகள், ஆளும் பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. மராத்தி மொழி சர்ச்சையையும் அரசு மீதான விமர்சனங்களையும் திசைதிருப்புவதற்காகவே லவ் ஜிகாத், ஒளரஙக்சீப் சமாதியை அகற்றுதல் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களை முதல்வர் ஃபட்னாவிஸ் கையில் எடுக்கிறார் என்று மகாராஷ்டிர அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.