உலகப் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்புப் பிரிவான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்புப் பிரிவான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் முறைப்படி கைகோர்த்த முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஸ்டார்லிங்க் துணைத் தலைவர் லாரன் ட்ரையரை மும்பையில் சந்தித்த பிறகு, மாநில அரசுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் நோக்கக் கடிதத்தில் (Letter of Intent - LoI) கையெழுத்திட்ட செய்தியைச் சமூக ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தினார்.
இந்தக் கூட்டுறவின் முதன்மை இலக்கு, மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகள், சேவை குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களான கட்சிரோலி, நந்தூர்பார், தாராஷிவ் மற்றும் வாஷிம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்குவதே ஆகும். தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் உடன் ஒத்துழைக்கும் முதல் இந்திய மாநிலம் மஹாராஷ்டிரா என்று முதலமைச்சர் ஃபட்னாவிஸ் பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம், மஹாராஷ்டிராவின் "டிஜிட்டல் மஹாராஷ்டிரா" திட்டத்தை வலுப்படுத்துவதுடன், அரசின் கல்வி, சுகாதாரம், தொலை மருத்துவ சேவை, பேரிடர் பதில் நடவடிக்கைகள் போன்ற முக்கியமான பொதுச் சேவைகளில் உயர் தொழில்நுட்பப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மின்னணு வாகனங்கள் மற்றும் கடலோர மேம்பாடு போன்ற துறைகளிலும் ஒருங்கிணைக்கப்படும். தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில், உலகின் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வைத்திருக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகை, ஒரு Game Changer என்று ஃபட்னாவிஸ் பாராட்டினார்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் செயல்படுவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க உரிமம் பெற்றுள்ளதை அறிவித்தார்.