மதுரையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கிய நிலையில், மதுரை விமானி பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.
வேகமாக வளர்ந்துவரும் மாநகரமாக சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை விளங்கிவருகிறது. இந்தவகையில், மதுரையை மேம்படுத்தும் விதமாக, மெட்ரோ, ஐடி பூங்கா என அடுத்தடுத்த திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்தவரிசையில், மதுரையில் இருந்து அபுதாபிக்கு நேரடியாக செல்லும் விமான சேவை கடந்த 12 ஆம் தேதி இண்டிகோ நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நேற்று முந்தைய தினம் (13.6.2025) அபுதாபியில் இருந்து மதுரைக்கும், பிறகு மதுரையில் இருந்து அபுதாபிக்கும் விமானம் சென்றது. மதுரையைச் சேர்ந்த விமானி தான் இந்த விமானத்தை இயக்கினார்.
முன்னதாக விமானம் புறப்படுவதற்கு முன்பு அவர் பயணிகளிடம் பேசும்போது, "கதவை சாற்றிவிட்டு கிளம்பிவிடுவோம். சுமார் 3,000 கி.மீ தொலைவில் 4 மணி நேரம் பயணித்து அபுதாபியை அடைவோம். விமான சேவையை நன்கு என்ஜாய் செய்யுங்கள். நம்ம ஊர் விமானம் என்று ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீர்கள். அது இங்கு கிடைக்காது.
நாம் புறப்படுவதற்கு தயாராகிவிட்டோம். எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் நன்றி. வணக்கம் என்று தமிழில் கூறினார். விமானத்தில் இருந்த பயணிகளும், முதல் விமானத்தை மதுரையைச் சேர்ந்த நீங்கள் இயக்குவது எங்களுக்கு கௌரவமாகவும், பெருமையாகவும் உள்ளது." என்று கூறினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த விமான சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாட்களில் காலை 7.20 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு அபுதாபிக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும்.
அகமதாபாத் விமான விபத்தால் மக்கள் பிதி அடைந்துள்ள நிலையில், விமானியின் நகைச்சுவையான பேச்சு , அச்சத்தை மறக்க வைத்து சற்றே மக்களை ஆறுதல் படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.