madhyapradesh
madhyapradesh twitter
இந்தியா

ம.பி.: வன்கொடுமைக்கு ஆளாகி 8 கி.மீ உதவிகேட்டபடியே நடந்துகொண்டிருந்த சிறுமி.. அதிர்ச்சி CCTV காட்சி!

Prakash J

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டே வருகின்றன. அதன் நீட்சியாய், இதோ இன்னொரு சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடுமை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜயினியில் தண்டி ஆசிரமம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, ரத்தக்கறை படிந்த ஆடையோடு உஜ்ஜயினி சாலையில் ஒவ்வொரு வீடாகச் சென்று உதவி கேட்கிறார் அவர்.

model image

அவர்கள் யாரும் உதவி செய்யவில்லை. உதவி கேட்டு ஒரு நபரை அனுகிய சிறுமியை, அந்த நபர் அங்கிருந்து விரட்டிவிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைப் பார்த்த சிலர், கந்தல் துணி எடுக்கும் குழந்தை என நினைத்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைதான நிலையில், அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து உஜ்ஜயினி எஸ்.பி சச்சின் சர்மா, “குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

model image

மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்), உஜ்ஜயினி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ, ”அந்தச் சிறுமிக்கு நீண்டநேரமாக யாரும் உதவ முன்வரவில்லை. இது சமூகத்தின் இருண்டபக்கத்தை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகையும் பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில், ’உஜ்ஜயினியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ரத்தக்கறை படிந்த சிறுமி ஒருவர், ஆடையோடு தெருவில் உள்ள வீடுகளில் உதவி கேட்கிறார். ஆனால், அவர்கள் சிறுமியை விரட்டியடிக்கின்றனர். நாம் என்ன ஆனோம்?? மனிதகுலத்திற்கு என்ன ஆனது? கருணைக்கு என்ன ஆனது? நம் புலன்களுக்கு என்ன ஆனது?? நாம் இறந்துவிட்டோமா? செத்த பிணங்கள்போல் நடமாடுகிறோமா? பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதற்கு வேடிக்கை பார்த்தவர்களும் பொறுப்பு. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டாமா?? ஒரு தாயாக இதைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் வருகிறது. ஒரு பெண்ணாக, என் உள்ளம் பரிதாபம் அடைகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். ஒருவர் எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்க முடியும்’ என அதில் தன் வேதனையைத் தெரிவித்துள்ளார்.