
உத்தரப்பிரதேசம் முசாபர் நகரை சேர்ந்த பெண்ணொருவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், ”எனக்கும் என்னுடைய கணவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி, என்னுடைய கணவர், அவருடைய தாயாரை மருத்துவரிடம் காட்டுவதற்காக பக்கத்து ஊருக்கு அழைத்துச் சென்றார். அச்சமயத்தில் என்னுடைய மாமனார், என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மிரட்டலும் விடுத்தார்.
அன்று மாலையில் வீடு திரும்பிய கணவரிடம் இதுகுறித்த விஷயத்தை எடுத்துரைத்தேன். ஆனால் அவரோ, மாமனாரைத் தட்டிக் கேட்காமல் ‘இனி உனக்கும் எனக்கும் எந்தவித உறவும் கிடையாது. நீ என்னுடைய தந்தையின் மனைவியாகிவிட்டாய். அதனால், எனக்கு அன்னையாகி விட்டாய். ஆகையால் இனி, உன்னுடன் ஒன்றாக வசிக்க முடியாது. வீட்டைவிட்டு வெளியே போ’ என்று கூறினார். மேலும் கணவரின் குடும்பத்தினர் என்னை அடித்துத் துரத்தினர்” என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அப்பெண் அவர்களுடைய உதவியுடன் கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி, "நான் பலமுறை அமைதியாக இருந்தேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து வலியுறுத்தியும், அவர் (கணவர்) என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்தே அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதேபோன்றதொரு வேறொரு வழக்கும் உ.பி.யில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2005ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி, தன் மாமனார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருந்தன. அன்றைய காலகட்டத்தில் அவர் அப்புகாரை, உள்ளூர் பஞ்சாயத்துக்கு முதலில் கொண்டுசென்றிருந்தார். அந்தப் பஞ்சாயத்தில் அப்பெண்ணுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் அப்பெண்ணை, அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததால், அப்பெண்ணின் திருமணமே செல்லாது எனவும், கணவருடன் இனி அப்பெண் வாழக்கூடாதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் அப்பெண், தன் கணவரை இனி மகனாகக் கருத வேண்டும் என அறிவிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அப்பெண்.
இதற்கிடையே இந்த வழக்கு ஊடக வெளிச்சத்தின் வழியாக உலகுக்குத் தெரியவந்தது. இந்த வழக்கில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம், அப்பெண்ணுக்கு ஆதரவாக வழக்குப் பதிவு செய்தது. அதன்பேரில் விசாரணை நடைபெற்று, இறுதியில் அந்த மாமனாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு அவலச் சம்பவம் போன்றே, தற்போது 2023-ல்கூட உ.பி.யில் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.