பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தெரிவித்துள்ளார். இதன்படி, கட்டாயப்படுத்தியோ, காதலின் பெயரிலோ பெண்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
மத்தியப் பிரதேச சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரிலேயே மதச் சுதந்திரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021இல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. முதல்வர் மோகன் யாதவின் அறிவிப்பு நிறைவேறினால் மத்தியப் பிரதேசம் மதமாற்றத்தை மரண தண்டனைக்குரிய குற்றமாக்கிய முதல் மாநிலம் ஆகும். 12 வயதுக்குரிய சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் 2017இல் சட்டமியற்றிய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.