சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு 

சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு 

சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு 
Published on

இளம் பெண் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சீக்கியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைத்துள்ளது. 

பாகிஸ்தானில், லாகூர் அருகில் உள்ள நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது சீக்கிய இளம் பெண் ஒருவர், கடத்தப் பட்டார். அவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் இந்த கட்டாய மதமாற்றத்துக்கு பாகிஸ்தான் சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள நங்கனா சாஹிப்பில் உள்ள சீக்கிய சமூகம், குருநானக் தேவின் பிறந்த இடமான குருத்வாரா ஜனாமஸ்தான் உள்ளிட்ட குருத்வாராக்களில் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை அறிவித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகாலி தள எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கும் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சீக்கிய பெண்ணை மீட்ட போலீசார், அவர் பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் இதுதொடர்பாக 8 பேரை கைது செய்ததாகவும் இன்று காலை செய்தி வெளியானது. 

இந்தச் செய்தியை அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘எங்கள் சகோதரி இன்னும் எங்களிடம் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. எங்களுக்கான நீதியை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி, பஞ்சாப் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கோரிக்கை வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டனர். 

இந்நிலையில், இது தொடர்பாக சீக்கியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது. பஞ்சாப் சட்ட அமைச்சர் ராஜா பஷரத் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து, நிலைமையை அமைதிப்படுத்த நங்கனா சாஹிப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் சீக்கிய சமூகத்தால் அமைக்கப்பட்ட 30 பேர் கொண்ட குழுவுடன் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் குருத்வாரா பர்பாண்டிக் கமிட்டி பொதுச்செயலாளர் அமீர் சிங் கூறுகையில், நங்கனா சாஹிப்பின் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் இந்த விஷயம் இணக்கமாக தீர்க்கப்படும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நங்கனா சாஹிப்பில் குருத்வாராக்களுக்கு முஸ்லிம்கள் நுழைவதை சீக்கிய சமூகம் தடை செய்யவில்லை எனவும் தெளிவு படுத்தினார். இது சீக்கிய மதத்தின் போதனைக்கு எதிரானது. சீக்கியர்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் அதன் வழிபாட்டுத் தலத்திற்கு வரவேற்கிறார்கள் எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com