இந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக செபி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இருந்த மதாபி பூரி புச், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஓய்வுபெற்றார். இவர் தலைவராக இருந்த சமயத்தில் அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புரி பூச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியது. ஏற்கெனவே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த குற்றச்சாட்டை மாதபி புரி பூச் மீது ஹிண்டன்பர்க் வைத்தது. ஆனால், இதை மாதபி மறுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம், மாதபி புரி பூச் மீது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூன்று பேர் புகார் அளித்தனர்.
இந்தப் புகார்கள் தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாதபி புரி பூச்க்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இந்தப் புகார்களை கடந்த டிசம்பர் 19ஆம் தேதி லோக்பால் அமைப்பு மேலும் பரிசீலனை செய்தது. அப்போது தனது விளக்கம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை மாதபி புரி பூச் தாக்கல் செய்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (மே 28) செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி புரி பூச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. ”மாதபி புரி பூச் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அனுமானங்கள் அடிப்படையில் உள்ளன. அவை உறுதிபடுத்தப்படவில்லை. குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஆதாரமற்றவை. சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில், புகார்கள் தகுதியற்றவை” என அது தெரிவித்துள்ளது.