வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. ஆனால், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு i-n-d-i-a கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் பதிவு செய்தனர். வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் அதற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியுள்ளன. அடுத்தக்கட்டமாக, இந்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று (ஏப். 3) விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் சுமார் 8 மணி நேரம் வரை விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.