அமெரிக்கத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி, இந்தியாவின் 2024 மக்களவைத் தேர்தலை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுகிறார். 64.6 கோடி வாக்காளர்கள் புகைப்பட அடையாள ஆவணத்துடன் வாக்களித்ததையும், தபால் வாக்கு 1% க்கும் குறைவாக இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். இதற்கு இந்திய தூதர் செர்ஜியோ கோரும் ஆதரவு தெரிவிக்கிறார்.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அமெரிக்காவில் தேர்தலின்போது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் தேர்தல் முறையை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது ‘Truth Social’ பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமலேயே தேர்தல் நடத்தப்படுவது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவில் அனைத்து வாக்காளர்களுக்கும் கட்டாய புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் 64.6 கோடி பேர் வாக்களித்ததாகவும், அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் வாக்குகளைப் பயன்படுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோரும் டிரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவின் 2024 மக்களவைத் தேர்தலை வாக்காளர் அடையாள சரிபார்ப்புக்கான சிறந்த முன்னுதாரணமாக குறிப்பிட்ட அவர், 64.6 கோடி வாக்காளர்களும் அடையாள ஆவணத்துடன் வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
டிரம்ப் ஆதரவு தெரிவிக்கும் SAVE America Act மூலம், அமெரிக்காவில் வாக்களிக்கப் பதிவு செய்யும்போது குடியுரிமைக்கான ஆதாரத்தையும், செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தையும் கட்டாயமாக்குவது, தபால் வாக்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. உடல்நலக்குறைவு, மாற்றுத்திறன், ராணுவப் பணி அல்லது பயணம் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே தபால் வாக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்களில் வாக்களிப்பது அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் வாக்காளர் அடையாளம் பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் பெரும்பாலும் குடியுரிமை குறித்த சுய உறுதிமொழியே நடைமுறையில் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.