‘நான் தான் TRUMP-ன் தலைமை ஊழியர்..’ UK பிரதமரை ஏமாற்றிய மர்ம நபர்! ரகசிய விவரங்கள் பரிமாறப்பட்டதா?
பிரிட்டன் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிடம், தன்னை டொனால்ட் ட்ரம்பின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் என அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்தேகத்தால் பர்ன்ஹாம் உடனே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததால், முக்கிய ரகசியங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. AI ஆள்மாறாட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டி பர்ன்ஹாம் கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை, கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய நியமனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான உறவில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட காரணங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது. கெய்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்களிடமும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் சரிந்த நிலையில் ராஜினாமா செய்தார். இந்தசூழலில் தான் புதிய பிரிட்டன் பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிடம் மொபைல் போனில் மெசேஜ் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் என அறிமுகம் செய்து கொண்டுபேசியுள்ளார். அவரிடம் நீண்ட நேரம் மெசேஜ் வாயிலாக உரையாடல் நிகழ்ந்தபோது அவர் குறித்த சந்தேகம் எழவே பிரிட்டன் பிரதமர் சுதாரித்துக்கொண்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிரதமர் பர்ன்ஹாமிற்கும், வைல்ஸ் என நடித்த நபருக்கும் இடையேயான தகவல் தொடர்பு, எந்தவொரு உரையாடலும் நடைபெறாமல், வெறும் செய்திகள் வடிவில் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் அமெரிக்க ஊடகம், இருவருக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் எதுவும் பரிமாறப்படவில்லை. மெசேஜ் சந்தேகத்துக்கு உரியவை என கண்டறியப்பட்டதும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் இந்தச் சம்பவம் குறித்து கவலை கொண்டதால், இவ்விஷயத்தை வெள்ளை மாளிகையிடம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில், இந்த சம்பவத்திற்கும் முன்னர் சூசி வைல்ஸின் ஃபோன் ஹேக் செய்யப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு, தன்னை டிரம்பின் தலைமை ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து அமெரிக்க செனட்டர்கள், ஆளுநர்கள் மற்றும் வணிக நிர்வாகிகளுக்கு போலி குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது செல்போன் தொடர்புகள் ஹேக் செய்யப்பட்டதாக வைல்ஸ் தனது சக அதிகாரிகளிடம் கூறியபோது விசயம் வெளிவந்ததாக அப்போதைய செய்திகள் வெளிவந்தன. “சூசியாக யாராலும் நடிக்க முடியாது. ஒரே ஒரு சூசிதான் இருக்கிறார்” என்று டிரம்ப் அப்போது கூறியிருந்தார்.
அவ்விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை விசாரணை நடத்தியபோது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளைப் போல AI-ஐ பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிகள் நடப்பதாக தூதர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்தசூழலில் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்தது தற்போது வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

