75 வயது என்பது அரசியலில் அனுபவமாகப் பார்க்கப்படுவதில்லை. அது, அடுத்த தலைமுறைக்கான வழிவிடும் களமாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, 75 வயது நிறைந்தவர்கள் அரசியலைவிட்டு விலகி, இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இது, தற்போது மீண்டும் எதிரொலித்துள்ளது.
நாக்பூரில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், ”75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். தனது 75 வயதில் பதவி விலகுவது குறித்து மோகன் பகவத் கூறிய இந்தக் கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் வயதையும் ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். காரணம், அவரும் விரைவில் 75 வயதைத் தொட உள்ளார்.
அந்த வகையில், உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ”எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்களை, 75 வயதை எட்டிய பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தினார். இப்போது அவர், அதே விதியை தனக்கும் பயன்படுத்துகிறாரா என்று பார்ப்போம்" என வினவியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, “நடைமுறை இல்லாமல் பிரசங்கம் செய்வது எப்போதும் ஆபத்தானது. 75 வயது வரம்பைப் பயன்படுத்தி மார்க்தர்ஷக் மண்டலுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது என்பது கொள்கைக்குப் புறம்பானது. ஆனால் தற்போதைய ஆட்சி இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் (செப்டம்பர் 11) மற்றும் பிரதமர் மோடி (செப்டம்பர் 17) இருவரும் செப்டம்பர் 1950இல் பிறந்துள்ளனர். இருவரும் 75 வயதைத் தொட உள்ளனர். இந்த நிலையில்தான் 75 வயது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதற்குக் காரணம், பாஜகவின் உள்கட்சி விதியான '75 வயதுக்கு மேல் டிக்கெட் இல்லை' என்பதை எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்கு நினைவூட்டுகின்றன. ”இந்த விதி, பல ஆண்டுகளாக கட்சியின் நடைமுறையில் உள்ளது எனவும், 75 வயதுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று பாஜக முடிவு செய்துள்ளது” எனவும் 2019ஆம் ஆண்டில் அமித் ஷா பேசிய கருத்தை அவர்கள் உதாரணமாகக் காட்டுகின்றனர்.
இதையடுத்தே, அதே விதி பிரதமர் மோடிக்கும் பொருந்துமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், மே 2023இல், பாஜகவின் அரசியலமைப்பில் ஓய்வூதியப் பிரிவு என எதுவும் இல்லை என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார். "மோடி ஜி 2029 வரை தொடர்ந்து தலைவராக இருப்பார்” என அவர் உறுதியளித்தார். இதே கருத்தை ராஜ் நாத் சிங்கும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் குறித்து மூத்த பொருளாதார நிபுணரும் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஸ்ரீனிவாஸ் கண்டேவாலே, "ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் தானாக முன்வந்து பதவி விலகாவிட்டால், அவருக்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மோடியின் விஷயத்தில், ஓய்வூதிய விதிமுறை பாஜகவால் நிர்ணயிக்கப்பட்டது" என விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் கண்காணிப்பாளரும் முன்னாள் சுயம்சேவகருமான திலீப் தியோதர், "இந்த விவாதம் மறைந்துவிடும். மோடி 75 ஆண்டுகால விதிமுறைக்கு விதிவிலக்காக இருப்பார் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பகவத் தெளிவுபடுத்தியிருந்தார். ஒரு விதிவிலக்கு, விதியை நிரூபிக்கிறது. இருப்பினும், பகவத்தின் அறிக்கையை பாஜக மீதான தனது பிடியை மேலும் இறுக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ”பகவத் மற்றும் மோடி இருவரும் உடல்ரீதியாக தகுதியானவர்கள் மற்றும் தொடர்ந்து திறம்பட சேவை செய்கிறார்கள். ஆகையால், அவர்கள் அரசியலை விட்டு தற்போதைக்கு விலக வேண்டியதில்லை” என்ற பொதுவான கூற்றும் முன்வைக்கப்படுகிறது. மேலும், மோகன் பகவத்தின் இந்தக் கருத்து, ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறதா அல்லது கட்டடக் கலைஞர் மொரோபந்த் பிங்கிளின் புகழுக்காகப் பேசப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். எனினும், பகவத்தும் மோடியும் தங்களுடைய 75ஆவது வயதை நெருங்கும்போது, இவ்விவகாரம் மீண்டும் அரசியலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.