ஜனசக்தி ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
பீகாரில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் அதன் தலைவருமாக இருப்பவர், லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ். இவரை, கடந்த மே மாதம் 25ஆம் தேதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி உத்தரவிட்டார், லாலு பிரசாத் யாதவ். அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்யவிருப்பதாகவும், தேஜ் பிரதாப் தெரிவித்த நிலையிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். 243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகக் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில்தான் ராஸ்டிரிய ஜனதா தள கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லாலுவின் மகனான தேஜ் பிரதாப், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘ஜனசக்தி ஜனதா தளம்’(JJD) என்ற கட்சியைத் தொடங்கினார். அதை, கடந்த மாதம் முறைப்படி பதிவு செய்தார். அக்கட்சிக்குச் சின்னமாக கரும்பலகை வழங்கப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் கட்சியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நிலையில், ஜனசக்தி ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.
இந்த தொகுதியில் 2015ஆம் ஆண்டு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, 2020 தேர்தலில் ஆர்ஜேடி வேட்பாளராக ஹசன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தச் சூழலில்தான் தற்போது மீண்டும் மஹுவாவுக்கு மாற முடிவு செய்துள்ளார். இன்று அக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேஜ் பிரதாப் அக்டோபர் 16ஆம் தேதி மஹுவாவிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பீகாரில் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த, தேஜ் பிரதாப், வஞ்சித் விகாஸ் இன்சான் கட்சி (VVIP) மற்றும் போஜ்புரிய ஜன் மோர்ச்சா (BJM) உள்ளிட்ட ஐந்து பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.