தீபிகா படுகோன்- L&T நிறுவனர் முகநூல்
இந்தியா

90 மணி நேர வேலை விவகாரம்: அறிக்கை வெளியிட்ட L&T.. மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்திய தீபிகா!

L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என்று கூறியதற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் Mental Health Matters என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு தனது கருத்தை கூறியிருந்தார். அதற்கு L & T அறிக்கை மூலம் பதிலளித்துள்ளது.

திவ்யா தங்கராஜ்

L&T நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் வேலை நேரம் குறித்தான கருத்தை கூறி இருந்தார். அவர் கூறியதாவது: “ஞாயிற்றுக்கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்து வருகிறேன்.

வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? அதற்குப் பதிலாக அலுவலகத்திற்கு சென்று வேலையை செய்யலாம். என்னுடைய சீன நண்பர் ஒருவர் பேசியபோது ‘சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும். சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்’ என்றார். இதில் இருந்துஉலகில் ஜெயிக்க வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என தெரிகிறது” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் இதுபோன்று பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டு இருந்தார். மேலும், Mental Health Matters.” என்ற ஹேஷ்டேக்கை தீபிகா பதிவிட்டுள்ளார்.

தீபிகா போடுகோனே இன்ஸ்டா ஸ்டோரி

L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கருத்திற்கு தீபிகா கருத்து தெரிவித்திருந்த நிலையில், L&T நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் "L&T நிறுவனம் எட்டு தசாப்தங்களாக, இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வடிவமைத்து அனைவரது உழைப்பு, அர்ப்பணிப்பால் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டுவர வேண்டும். அசாத்திய வளர்ச்சிகளை அடைய வேண்டுமெனில் அசாத்திய முயற்சியும் முக்கியம். எங்களது நிறுவன தலைவரும் அதை மையமாக வைத்தே வேலை நேரம் குறித்து பேசி இருந்தார். அவரது கருத்து பெரிய இலட்சியத்தை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டு இருந்தனர்.

L&T -ம் இந்த அறிக்கைக்கு மீண்டும் தீபிகா பதிலளித்துள்ளார். அதில், இவர்கள் மேலும் இதை மோசமாக்கியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

தீபிகா போடுகோனே இன்ஸ்டா ஸ்டோரி

தொடர்ச்சியான இந்த பதிலடிகள், கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.