சஞ்சய் ராய் எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை | குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! தாய் சொன்ன அந்த வார்த்தை!

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில் அவருக்கான தண்டனை குறித்த விபரம் இன்று (ஜனவரி 20)அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதேபோல் ராய்க்கு 10 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை அதை மறுத்தார்.

சஞ்சய் ராய்

முன்னதாக இன்று காலை தண்டனை குறித்து இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது சிபிஐ தரப்பில், ”அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அதேபோல் தண்டனைக்கு முன்பாக குற்றவாளி ராய், ”நான் எதுவும் செய்யவில்லை. நான் கட்டமைக்கப்பட்டேன். அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. என்னை சித்திரவதை செய்தார்கள். என்னை நிறைய ஆவணங்களில் கையெழுத்திட வைத்தார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ராயின் தாயார் மலாட்டி, ”இந்த வழக்கில் என் மகன் குற்றவாளி என்றால் அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். நீதிமன்றம் என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், “சிபிஐ விசாரணையில் திருப்தி இல்லை” எனப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் தெரிவித்திருந்தனர். "குற்றத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஒருவர் மட்டுமே குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆனால் மற்றவர்களைக் கைது செய்ய சிபிஐ தவறிவிட்டது. எதிர்காலத்தில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்றால், இதுபோன்ற நபர்கள் வாழ உரிமை இல்லை” என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சஞ்சய் ராய்

இந்த வழக்கில், சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் தாலா பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் அபிஜித் மண்டல் இருவர் மீதும் சிபிஐயால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை. அவர்கள் இருவரும் குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்களைச் சிதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், தற்போது சந்தீப் கோஷ், அபிஜித் மண்டல் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.