வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது. தொடர்ந்து அவருக்கு தண்டனை குறித்த விவரங்களை, ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தவிர, ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பிலும் சிபிஐ சார்பிலும் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொல்கத்தா மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய், "எங்கள் மகள் பெரிய கனவு கண்டாள். அவள் இப்படி ஒரு மரணத்தை அடைய வேண்டியிருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவள் எங்களை விட்டுப் பிரிந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளது இறப்புச் சான்றிதழ்கூட இல்லை. ஒரு பெண் மருத்துவருக்கு தனது பணியிடத்தில்கூட பாதுகாப்பு இல்லையென்றால், வேறு எங்கு அவருக்கு பாதுகாப்பு இருக்கும்? நான் பிரதமரைச் சந்தித்து, எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
பிரதமரைச் சந்திக்க தாயார் விரும்பியதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ அக்னிமித்ர பால், "பிரதமரை சந்திக்க ஒரு சந்திப்பு பெறுவதற்கான நடைமுறை உள்ளது. நமது பிரதமர், அவர்களுக்கு (பெற்றோருக்கு) சிறிது நேரம் கொடுத்து அவர்களின் வேண்டுகோளைக் கேட்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில நிதியமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா, "இந்த நாட்டில் உள்ள எவருக்கும் பிரதமரைச் சந்தித்து அவரைச் சந்திக்க உரிமை உண்டு. ஆனால், முதல் நடவடிக்கையை எடுத்தது நமது தலைவர் மம்தா பானர்ஜிதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. " என்றார்.