மோனோஜித் மிஸ்ரா (அமைச்சர் சந்திரிமாவிற்குப் பின் இருப்பவர்) pt web
இந்தியா

சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி!

தெற்கு கொல்கத்தாவில் இயங்கி வரும் சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

PT WEB

தெற்கு கொல்கத்தாவில் இயங்கி வரும் சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளுமாறு முன்னாள் மாணவர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக மாணவி புகார் அளித்துள்ளார். அதுவும் கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்கு தற்போது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடந்தது என்ன?

குற்றம்சாட்டியுள்ள மாணவி கடந்த ஜூன் 25 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் தேர்வு தொடர்பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கல்லூரிக்கு வந்துள்ளார். முதலில் அவர் கல்லூரி யூனியன் அறையில் அமர்ந்திருந்தார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னை வலுக்கட்டாயமாக கல்லூரி பாதுகாப்பு காவலர்கள் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும், எஃப்.ஐ.ஆரில் உள்ள கூற்றுப்படி, “இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி மனோஜித் மிஸ்ரா தற்போது தெற்கு கொல்கத்தா மாவட்ட திரிமாணமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். மற்ற இருவர் ஜியாப் அஹமது (முதலாமாண்டு மாணவர்), பிரமித் முகர்ஜி (மாணவர்). இந்த சம்பவம் ஜூன் 25 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50-க்கு இடைப்பட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

நடவடிக்கைகள்...

இந்த விவகாரம் தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மோனோஜித் மற்றும் ஜாய்ப் இருவரும் ஜூன் 26 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான பிரமித் அவரது வீட்டில் இருந்து இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மூவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் கேள்வி!

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இந்த விவகாரத்தில் ஆளும் திரிமாணமுல் காங்கிரஸ் அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார். அவர், “மேற்குவங்கத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த ஆண்டு, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் இப்போது இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு பணம் வழங்குவார். இந்த விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய் பிரகாஷ் மஜும்தார். “இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். எதிர்க்கட்சி தலைவர் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இதுபோன்ற விவகாரங்களில் போராட வேண்டும்” என்றார்.

இதில் முக்கியக் குற்றவாளியான மோஜித் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக இருந்துள்ளார். தற்போது க்ரிமினல் வழக்கறிஞராக அலிபூர் நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகிறார்.