durga pooja  ANI
இந்தியா

கொல்கத்தா துர்கா பூஜை கூட்ட நெரிசல்: 19 பேர் உயிரிழப்பு.. 7 பேர் கைது!

துர்கா பூஜை விழாவில் பரிதாபம்: கூட்ட நெரிசலில் பலி, பாதுகாப்பு குறைபாடு கேள்விக்குறி

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள சோர்பாகன் (Chorbagan) பகுதியில் துர்கா பூஜை விழா நடைபெற்று வந்தது. சனிக்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது, அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் பிரிவின் கீழ் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Kolkata's Chorbagan pandal

இந்த வழக்கில் சோர்பாகன் துர்கா பூஜை குழுவின் செயலாளர் ராஜ் குமார் செவ்டா, துணைத் தலைவர் சாந்தனு துபே உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூங்கில் கட்டமைப்புப் பணியில் ஈடுபட்ட பிப்லப் முகர்ஜி, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த கௌசிக் சாஹா, பிண்டு டே உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, விழா ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கியில் செய்த அறிவிப்பால் மக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் விசில் அடித்ததால், பந்தலுக்குள் செல்லக் காத்திருந்த மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், நெரிசலுக்கான முழுமையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள மற்ற முக்கிய துர்கா பூஜை பந்தல்களில் மக்களை அனுமதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், விழா நடைபெறும் இடங்களில் போதிய வெளிச்சம், முறையான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Suvendu Adhikari

விழாவின் அலங்காரத்தைவிட மக்களின் உயிர்தான் முக்கியம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தடயவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொல்கத்தா துர்கா பூஜை பந்தல் கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 பேரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்துப் பார்வையிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்