மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா பானர்ஜி, தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருப்பதுடன், கட்சியையும் கைப்பற்றி அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து மம்தாவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். மேலும், 20 மக்களவை எம்பிக்களும் திரிணாமூல் கட்சியில் இருந்து விலகியிருப்பது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மம்தா பாஜர்ஜி ஆதரவு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வீடியோ வாயிலாக உரையாற்றிய மம்தா பானர்ஜி, தன்னை மவுனமாக்க வேண்டும் என நினைத்தால், என்னை கொல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், " தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக அராஜகப் போக்குடன் நடைபெற்று வருகிறது. நீங்கள் யாரைத் தான் தாக்கவில்லை. மஹூவா மொய்த்ரா, அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோரைத் தாக்கினீர்கள். எனது வீட்டை கூட தாக்கியிருக்கிறீர்கள். அதேசமயம், என்னை மவுனமாக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் என்னைக் கொல்ல வேண்டியிருக்கும். நான் பயந்து பின்வாங்கும் நபர் அல்ல. என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காகவே போராடி இருக்கிறேன். இனியும் அதே பாதையில்தான் செல்வேன்" என்று ஆவேசமாகக் பேசியிருக்கிறார்.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை கூட வழங்காமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாஜக அருவெருபான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இது மேற்கு வங்கத்தில் கலாச்சாரம் கிடையாது” எனத் தெரிவித்திருக்கிறார்.