காஜியாபாத்திலிருந்து கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் 30 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பி இருக்கும் நிகழ்வு கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் உள்ள சாஹிபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுவன்தான் ராஜூ. இவர், கடந்த செப்டம்பர் 8, 1993 அன்று தன் 7 வயதில் காணாமல் போயுள்ளார். ராஜூவை தேடி அழைந்த குடும்பத்தினர் இறுதியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே இருந்துள்ளது.
இந்த நிலையில்தான், 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார் ராஜூ. 7 வயது இருக்கும் ராஜூவுக்கு தற்போது 37 வயது. கடத்தி செல்லப்பட்ட ராஜு இதுவரை ராஜஸ்தானில்தான் இருந்துள்ளார். ராஜஸ்தானில் இவர் இருந்த நாட்களில், கடத்தி செல்லப்பட்டவர்களால் அடிக்கப்பட்டு, வேலை செய்யவேண்டும் என்று துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கெல்லாம், அவருக்கு கிடைத்த பலன் இரவு ஒரு வேலை ரொட்டி மட்டுமேதான். இப்படியே அவரது வாழ்நாட்கள் கழிந்துள்ளன. ஒருநாள் பல முயற்சிகளுக்கு பின் அங்கிருந்து தப்பித்து ஒரு லாரியில் ஏறிய ராஜு, டெல்லியை நோக்கி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் டெல்லிக்கு வந்து சேர்ந்த இவருக்கு, தான் வசித்து வந்த இடத்தின் பெயரும் நினைவில் இல்லை, பெற்றோர் குறித்தும் எந்த நினைவும் இல்லை. பல காவல்நிலையத்தில் ஏறி இறங்கியும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை.
இந்தநிலையில்தான், காஜியாபாத்தில் உள்ள கோடா காவல்நிலையத்துகு வந்து சேர்ந்த இவர், தனது நிலை குறித்து காவல் அதிகாரியிடம் தெரிவிக்க... அவர்கள் உணவு, தண்ணீர், காலணி என ராஜூவுக்கு தேவையான எல்லா உதவுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும், இவர் குறித்தான தகவல்களை சமூக ஊடகங்கள் என அனைத்திலும் வெளியிட ஆரம்பித்தனர். இந்தநிலையில்தான் ராஜுவின் மாமாவுக்கு இந்த தகவல் தெரியவர உடனடியாக காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரிக்க இறுதியில் ராஜுவை கண்டடைந்துள்ளார்.
இது குறித்து ராஜு தெரிவிக்கையில், "நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் கடவுள் அனுமனுக்கு நன்றி கூறுகிறேன். என்னை மீண்டும் என் குடும்பத்துடன் இணைக்க வேண்டும் என்று அவரிடத்தில்தான் பல நாட்களாக நான் பிரார்த்தனை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு ராஜுவை கண்ட குடும்பத்தினரும் அவரை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்.