நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாய் ரொக்க பணம் வெளிப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிநீக்க தீர்மானங்களில் கையெழுத்திட்டிருந்தனர். ஏற்கெனவே, நீதித்துறையில் ஊழல் விவகாரம் குறித்து பலமுறை ஜெகதீப் தன்கர் தனது வருத்தத்தையும் கவலையும் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல நீதிபதி சேகர் யாதவ் விவகாரத்திலும் பதவிநீக்க கோரிக்கை நிலுவையில் உள்ளது. நீதிபதி சேகர் யாதவ் ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார் எனவும், ஒரு நீதிபதி இத்தகைய கூட்டத்தில் பங்கேற்று தனது மதரீதியான கருத்துக்களை வெளியிடுவது சரி அல்ல எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆகவே நீதிபதி சேகர் யாதவை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தீர்மானம் அளித்திருந்தனர். ஆனால், தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என ஜெகதீப் தன்கர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில்தான், “தன்கரும் பிரதமர் நரேந்திர மோடியும் இடையே என்ன நடந்தது என்பது குறித்து தன்கர்தான் தெளிவாக விளக்க வேண்டும்” என கார்கே கூறியுள்ளார். தன்கர் எப்போதும் அரசின் பக்கமே நிற்பவர் எனத் தெரிவித்திருக்கும் கார்கே, அவர்தான் என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறார். விவசாயிகள், ஏழைகள் அல்லது வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப முற்பட்டபோதெல்லாம் தன்கர் வாய்ப்பு வழங்கியதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது தொடர்பாகப் பேசியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனுசிங்வி, “பதவியில் இருக்கும்போது சிறிதளவாவது சுயாதீனமாக செயல்பட முயற்சித்ததே ஜகதீப் தன்கரின் தவறு” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மௌனத்தைக் குற்றம் சாட்டிய அவர், “இந்த விவகாரத்தில் ஜகதீப் தன்கரும், மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜுவும் சமீப நாட்களில் காட்டிய மௌனத்திலேயே அதற்கான எல்லா பதில்களும் அடங்கியிருக்கின்றன” என்றும் தெரிவித்திருக்கிறார்.
2022இல் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 75% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட மார்கரெட் ஆல்வா 25% வாக்குகளை மட்டுமே பெற்றார். கடந்த ஜூலை 21 ஆம் தேதி, ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தினை வழங்கிய தன்கர் உடல்நலத்தினைக் காரணமாகக் கூறி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.