பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி கோப்புப்படம்
இந்தியா

வயநாடு வாக்கு எண்ணிக்கை: சகோதரரை முந்திய சகோதரி... வரலாறு படைக்கும் பிரியங்கா காந்தி!

கேரளா வயநாடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3,62,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Jayashree A

கேரளா வயநாடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3,62,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வயநாடு இடைத்தேர்தல்

இந்திய நாடாளுமன்றத்திற்கு 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பின் அவர் ரேபரேலியை தன் தொகுதியாக தேர்ந்தெடுத்ததால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்து அப்பகுதிக்கு இடைத்தேர்தலை அறித்ததது தேர்தல் ஆணையம்.

அதன்படி இடைத்தேர்தலானது நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் போட்டியிட, காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி முதன்முறையாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து CPI கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான சத்யன் மோக்ரி மற்றும் BJP யின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களமிறங்கினர்.

சத்யன் மோக்ரி

பிற மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணியில் கம்யூனிஸ்ட் இணைந்திருந்தாலும், கேரளாவில் நிலைமை அப்படியல்ல. இதனால் வயநாட்டு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து CPI கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான சத்யன் மோக்ரி போட்டியிட்டது கவனத்திற்குரியது.

நவ்யா ஹரிதாஸ்

இவர் பொறியியல் பட்டதாரி மற்றும் முன்னாள் மென்பொருள் நிபுணர். பாஜக-வில் 2015 முதல் இவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. 2020ல் நகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிப்பெற்ற இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய லீக் வேட்பாளார் அகமது தேவர்கோவிலிடம் தோல்வியடைந்தார். இருப்பினும் இடைத்தேர்தலில் பிரியங்காவை எதிர்த்து நின்று மக்களின் கவனத்தைப்பெற்றுள்ளார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தற்போதைய நிலவரம்:

தற்பொழுது 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி 5,64,515 வாக்குகள் பெற்று 3,72,883 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். இவரைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் வேட்பாளரான சத்யன் மோக்ரி 1,91,632 வாக்குகள் பெற்றுள்ளார். அடுத்ததாக பாஜக கட்சியைச் சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் 1,03,480 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சகோதரரை மிஞ்சிய சகோதரி!

மக்களவை தேர்தல் நடந்தபொழுது காங். சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி மொத்தம் 6,42,299 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா, 2,80,594 வாக்குகள் பெற்றிருந்தார். போலவே பாஜக-வின் சுரேந்திரன் 1,29,868 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். ஆனால் தற்போது 3,72,883 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார் பிரியங்கா.

அதாவது, பிரியங்கா தன் சகோதரர் ராகுலை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற இருக்கிறார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது!