செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி, கேரள மாநிலத்தில் உள்ள ஸ்பாக்களில் வைத்துப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளக் காவல்துறை 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண, அந்த ஸ்பாக்களுக்கு வந்து சென்றவர்களின் விவரங்களை இந்தக் குழு சேகரித்து வருகிறது.
அந்தவகையில் தான், இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவிலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள CCTV காட்சிகளைப் பார்வையிட, விசாரணைக் குழு சென்னைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் குற்றப்பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொல்லம் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக உள்ளார் என்று திருவனந்தபுரம் கோட்டை உதவி காவல் ஆணையர் கே. பிரதீப் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 21 அன்று ஆந்திராவைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி காணாமல் போனதாக, அவரை வளர்த்து வந்த சித்தி புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியதாக உதவி காவல் ஆணையர் பிரதீப் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், செப்டம்பர் 22 அன்று, அவருடன் ஒரே ஸ்பாவில் வேலை செய்த ஓர் இளைஞருடன் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.
சிறுமியின் தொலைபேசியில் இரண்டு ஆதார் அட்டைகள் இருந்ததைக் காவல்துறை கண்டறிந்தது. ஒன்றில் அவரது வயது 20 என்றும், மற்றொன்றில் 16 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அவர் வயது வந்தவராகக் கருதப்பட்டு, நீதிமன்றம் சிறுமியைச் செல்ல அனுமதித்ததாக அதிகாரி கூறினார்.
பின்னர், அவர் சிறுமியாக இருக்கலாம் எனச் சந்தேகித்த விசாரணை அதிகாரிகள், ஆந்திராவில் அவர் படித்த பள்ளியைத் தொடர்புகொண்டனர். "பள்ளிப் பதிவேடுகளைச் சரிபார்த்தபோது, சிறுமிக்கு 16 வயது என்பது தெரியவந்தது. சிறுமியின் வயதை உறுதிசெய்த பின்னர், வழக்கின் தன்மையே மாறிவிட்டது" என்று பிரதீப் கூறினார். செப்டம்பர் 23 அன்று, பூஜப்புராவில் உள்ள குழந்தைகள் நலக் குழுவின் (CWC) முன் சிறுமி ஆஜர்படுத்தப்பட்டு, மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கவுன்சலிங் அளிக்கப்பட்டது.
ஜூன் இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில், கொல்லம் பகுதியில் உள்ள ஒரு ஸ்பாவுக்குத் தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர், மற்றொரு ஸ்பாவிலும் நான்கு நாட்கள் இருந்ததாக அதிகாரி தெரிவித்தார். தொழிச்சல் மற்றும் சப்பாத்தில் "ஆயு கேரளா" ஸ்பாக்களை நடத்தி வரும் சஜித் குமார் (47), அவதுறையில் "டிரீம்ஸ் ஸ்பா"வின் உரிமையாளர் நிஷாந்த் (46) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த இரு ஸ்பாக்களின் உரிமையாளர்களையும் கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் கூறியுள்ளார்.
சென்னைக்கு அருகிலுள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்பாவிலும் தான் வேலை பார்த்ததாகவும், அங்கும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் சிறுமி விசாரணையின்போது தெரிவித்துள்ளார். "சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், ஜீரோ FIR பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காகச் சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது," என்று பிரதீப் தெரிவித்தார். இதன் பின்னர், சிறுமியின் சித்தியும் அவரது கணவரும் காணாமல்போன நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் அவர்களைக் காவல்துறை கண்டுபிடித்தது. கோரண்ட்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவர்களது வீட்டிலேயே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், "இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது. எங்களிடம் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை தொடரும்போது கூடுதல் தகவல்கள் வெளிவரும்," என்றும் திருவனந்தபுரம் கோட்டை உதவி காவல் ஆணையர் கே. பிரதீப் கூறியுள்ளார்.