சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலைகளை தொடர்ந்து, கருவறையைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலும் தங்கக் கொள்ளை நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.
அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியும், முராரி பாபுவும் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், சிபிஐ விசாரணை தேவையில்லை என முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “உயர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் விசாரணையை இந்த அரசுதான் பரிந்துரைத்தது. இந்த விசாரணையை நடத்துவதில் முதலமைச்சருக்கோ அல்லது முதலமைச்சர் அலுவலகத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை" என்று கூறிய அவர், அரசியல் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று நிராகரித்தார். ”சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, யாரை விசாரிக்க வேண்டும் என்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்யும்” என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, சபரிமலை தங்கத் திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் (SIT) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) உடன் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நியமனங்கள் விசாரணையின் நேர்மையைச் சிதைப்பதாகக் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீசன் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலைகளை தொடர்ந்து, கருவறையைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலும் தங்கக் கொள்ளை நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கருவறை நிலைக்கதவுகளுக்கு மேல் உள்ள சிவன் மற்றும் யாளி உருவங்களில் இருந்த தங்கக் கவசங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.