கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியைச் சேர்ந்தவர் மேகா (24). மத்திய உளவுத்துறை அதிகாரியான இவர், பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மேகா இறந்துகிடந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது.
இரவுப் பணியை முடித்த மேகா, நேற்று அதிகாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய வளாகத்திலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல் ரயில் பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் காணப்பட்ட மேகாவின் அடையாள அட்டை, அவரை விரைவாக அடையாளம் காண உதவியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புனே-கன்னியாகுமரி ரயிலின் லோகோ பைலட், ஹாரன் அடித்த போதிலும் பெண் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் இப்போது சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், காவல்துறை மற்றும் ஐபி அதிகாரிகள் இருவரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவரது மொபைல் போன் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். கடைசியாக டயல் செய்யப்பட்ட எண் விசாரணையில் உள்ளது. அவர் கடைசியாக பேசிய நபரை போலீசார் அடையாளம் கண்டவுடன், இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மாமா சிவதாசன், ‘அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சொல்வதற்கு எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. முறையான விசாரணை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். முழுமையான விசாரணையை உறுதி செய்ய ஐபி அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!