கேரள முதல்வர் பினராயி விஜயன் pt web
இந்தியா

பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம்.. உள்ளுக்குள்ளேயே கிளம்பிய கடும் எதிர்ப்பு.. பின்வாங்கிய கேரள அரசு!

கேரளாவில் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை உறுதிபடுத்தியுள்ளார்.

Prakash J

கேரளாவில் பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை உறுதிபடுத்தியுள்ளார்.

மத்திய அரசு கடந்த, 2022ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பி.எம் ஸ்ரீ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், இத்திட்டத்திற்காக 60 சதவீத நிதியை மத்திய அரசும், மீதம் உள்ள 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு ஒன்றையும் விதித்திருந்தது. அதன்படி, பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை ( NEP) 2020 ன் படியே கல்வித்திட்டம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்தன. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சேர வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமலேயே இருந்து வருகிறது.

pm shri

இந்நிலையில்தான், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கடுமையாக எதிர்த்து வந்த கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவுள்ள பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சமீபத்தில் இணைவது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, “மத்திய அரசின் நிதி நிறுத்திவைக்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த 3,500 கோடி ரூபாய் கல்வி நிதியைப் பெறுவதற்கான வியூகமாகவே பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை கேரள அரசு ஏற்றுக்கொண்டதாக பொருள் அல்ல” என விளக்கமளித்திருந்தார்.

பினராயி விஜயன்

இதைத் தொடர்ந்து, பிஎம் ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் இணையும் கேரள அரசின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருகட்டத்தில் அமைச்சரவையிலிருந்து விலகுவதாகக் கூறியது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம் குறித்து விவாதிக்க அமைச்சரவை துணைக் குழுஉருவாக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி அளித்துள்ளது.