முதலமைச்சர் பினராயி விஜயன் pt web
இந்தியா

வறுமையை ஒழித்த கேரளா! இடதுசாரிகளின் புரட்சி.. நிகழ்ந்தது எப்படி?

கேரளா தீவிர வறுமையை ஒழித்த முதல் இந்திய மாநிலமாக மாறியுள்ளது. உணவு, வீடு, வருமானம், சுகாதாரம் என பல தளங்களில் திட்டமிட்டு செயல்பட்டு, 93% ஏழை குடும்பங்களை மீட்டுள்ளது.

Angeshwar G

தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்

குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை

சுவைத்தனன் பெறாஅன்,

கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல்

வறுங்கலம் திரிந்து, அழக் கண்டு

என்கிறது பெருஞ்சித்திரனாரின் புறனாற்றுப்பாடல்.. உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தையின் துயரத்தை விவரிக்கிறது இப்பாடல்.. பாடல் எழுதப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன... நவீன காலத்திலும் உணவில்லாமல் தவிக்கும் மக்களது எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், அப்படி தீவிர வறுமையில் தவிக்கும் மக்களை தனது திட்டங்களின் மூலம் மேம்படுத்தியிருக்கிறது கேரள அரசு.. என்ன விபரம் முழுமையாகப் பார்க்கலாம்.,

தீவிர வறுமையை ஒழித்த முதல் இந்திய மாநிலமாக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்குத் தயாராகிக் கொண்டு வருகிறது அண்டை மாநிலமான கேராளா. குறிப்பாக கேரளா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதி இந்த அறிவிப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPEP

தீவிர வறுமைக்கான சர்வதேச அளவுகோல்களின்படி, நாள் ஒன்றுக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.184.45) குறைவான செலவில் வாழும் மக்கள் தீவிர வறுமையில் வாழும் மக்களாகக் கருதப்படுவர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, வணிகத்தை எளிதாக்குவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை மாநிலத்திற்குள் கொண்டு வருவது என வளர்ச்சியைக் குறித்த குறியீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மாறியுள்ளன. ஆனால், வறுமையால் நாளுக்கு நாள் அவதிப்படும் மக்களும் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் தனிநபர் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது கேரளா. இத்தனைக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக அம்மாநில அரசு பலமுறை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தீவிர வறுமைக்கான சர்வதேச அளவுகோல்களின்படி, நாள் ஒன்றுக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.184.45) குறைவான செலவில் வாழும் மக்கள் தீவிர வறுமையில் வாழும் மக்களாகக் கருதப்படுவர். ஆனால், அவர்களை மேம்படுத்த ஒரே மாதிரியான தீர்வுகள் மட்டும்போதாது. குடும்பத்திற்கேற்ப அரசாங்கத்தின் செயல்பாடுகள் மாற வேண்டும். அதை நிகழ்த்தியிருக்கிறது கேரளா.

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் இடதுசாரி அரசாங்கம் அமைந்தபின் மாநிலத்தில் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது Extreme Poverty Eradication Programme (EPEP). இத்திட்டம் தொடங்கப்பட்டதற்குப்பின் 100% வறுமை ஒழிப்பு எனும் நிலையை தற்போது மாநிலம் எட்ட இருக்கிறது.

64 ஆயிரம் குடும்பங்கள்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கேரளாவில் மொத்தம் 77 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. StatisticsTimes தரவுகளின் படி கேரளாவில் 36 மில்லியன் மக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 3.61 கோடி பேர். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இந்திய அளவில் 15 ஆவது இடத்தில் கேரளா இருக்கிறது. இந்தத் தரவுகள் எல்லாம் தேசிய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், EPEP திட்டத்தின் கீழ் கேரளாவில் 64 ஆயிரத்து 6 குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டு அதில், 93% குடும்பங்கள் தீவிரமான வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7% குடும்பங்களுக்கும் தேவையான வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கணக்கெடுப்புகளும் பொதுவான வறுமைக்கோட்டின் அடிப்படையிலான கணக்கெடுப்புகளாக அல்லாமல், உள்ளூர் அளவில் மக்கள் நேரடியாக அணுகும் குடும்ப ஸ்ரீ போன்ற திட்டங்களின் மூலமும், பஞ்சாயத்துகள் மூலமும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. உணவு, சுகாதாரம், பாதுகாப்பான வீட்டுவசதி மற்றும் நிலையான வருமானம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத குடும்பங்களாகப் பார்த்துப்பார்த்து 64 ஆயிரம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, குடும்ப ஸ்ரீ 4.8 மில்லியனுக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களைக் கொண்டது. இது, உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான சுய உதவி அமைப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக புரட்சி

“வறுமை ஒழிப்பு என்பது மட்டுமே நோக்கம் அல்ல; மனிதவள மேம்பாடு, சமூக சீர்மை ஆகியவற்றுக்கும் இது ஒரு புதிய அடையாளம்”

அதுமட்டுமின்றி, இக்குடும்பங்களை பல்வேறு வகைகளாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்திருக்கின்றனர். உதாரணத்திற்கு நிலையான வருமான ஆதாரம் இல்லாத குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லாத குடும்பத்தினர் சரியான ஆவணங்களைப் பெறுவதற்காக Rights without Delay என்று இன்னும் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்திட்டத்தினை வெறும் வறுமை ஒழிப்புத் திட்டமாக மட்டுமே சுருக்காமல், தன்னிறைவு, தனித்துவமான வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் சமூக புரட்சியாக தெரிவிக்கிறார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். இத்திட்டம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பேசிய அவர், “வறுமை ஒழிப்பு என்பது மட்டுமே நோக்கம் அல்ல; மனிதவள மேம்பாடு, சமூக சீர்மை ஆகியவற்றுக்கும் இது ஒரு புதிய அடையாளம்” எனத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கிராம பஞ்சாயத்துகள், கிராம சபை மற்றும் நகராட்சி அமைப்புகள் போன்றவை மிக முக்கியப் பங்காற்றியதாகவும் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

Multidimensional Poverty Index

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிகளில் புதிய புதிய மைல்கல்லை எட்டி வருகிறது. அதிக பொருளாதாரம் கொண்ட நாடுகளில் முதலிடத்திற்கு செல்ல போட்டி போட்டு வருகிறது. ஆனால், முரண்பாடாக அதிகளவில் வறுமையில் வாடும் மக்களையும் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பல மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக இந்திய அரசாங்கம் தெரிவிக்கும்போதே இந்தியாவில் வறுமையில் வாடிய குடும்பங்களின் எண்ணிக்கையை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நிதி ஆயோக்கின் Multidimensional Poverty Index (MPI) 2023ன்படி, மிகக் குறைந்த வறுமை விகிதத்தைக் கொண்ட இந்திய மாநிலங்களில் கேரளா வெறும் 0.55% உடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் கோவா (0.84 சதவீதம்), மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு (2.20 சதவீதம்), சிக்கிம் (2.60 சதவீதம்), மற்றும் பஞ்சாப் (4.75 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களின் இருக்கின்றன.

ப.சிதம்பரம்

புதிய தலைமுறை இணையத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ‘தரவுகளின் அடிப்படையில்தான் விமர்சனம்’ எனும் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், 2023-24-ல் மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களின் நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அவரது வார்த்தைகளையும் MPI அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வறுமை உண்மையில் எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கட்டுரையின் பகுதி, “ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை செலவு செய்யும் குடும்பத்தில் ஒருவருக்கு எவ்வளவு சத்தான உணவு கிடைக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட இடத்தில் குடியிருப்பார்கள்? நோய்வாய்ப்பட்டால் எந்த அளவுக்கு மருந்து-மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவார்கள் அல்லது எப்படிப்பட்ட மருத்துவ வசதி அவர்களுக்குக் கிடைக்கும்?

இந்திய மக்கள் தொகையில் 10% என்பது மிகவும் குறைவானதல்ல, அது சுமார் 14 கோடி. 14 கோடியுடன் தனி நாடாக இருந்தால் மக்கள் தொகை அடிப்படையில் இன்றைக்கு உலகின் பத்தாவது இடத்தில் அது இருக்கும். இருந்தும் நீதி ஆயோக்கும் ஒன்றிய அரசும் நாட்டில் வறியவர்கள் எண்ணிக்கை வெறும் 5% தான் என்கின்றன. இந்தக் கூற்று இரக்கமற்றது மட்டுமல்ல, நேர்மையற்றதும் கூட” எனத் தெரிவிக்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களே காரணம்

தீவிர வறுமையைக் குறிக்கும் அளவுகோல்களில் நமக்கும் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும் கேரளாவின் இந்த சாதனை பாராட்டக்கூடியது மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலமும் பின்பற்ற வேண்டியது என்கிறனர் பொருளாதார வல்லுநர்கள்.

இப்போது மீண்டும் திட்டத்திற்குச் செல்லலாம்... மாநிலத்தில் தீவிர வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு பல ஆண்டுகளாக அம்மாநில அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்களே காரணம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நில சீர்திருத்தங்கள், சமூக நலத்துறைகளுக்கு அதிகளவில் நிதிகளை ஒதுக்குவது (High social spending), மருத்துவ சேவையை பொது சேவையாக உறுதிப்படுத்துவது என பல்வேறு திட்டங்களை மாநில அரசு பல ஆண்டுகளாக செயல்படுத்தியதே இந்த முன்னேற்றத்திற்கான காரணம் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதும் மக்கள் இருக்கின்றனர்     

ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் இன்னொரு தரவு இருக்கிறது. நியூஸ் க்ளிக் வெளியிட்டிருக்கும் செய்தியில், “2024-25 பட்ஜெட்டின் படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2020-21 இல் ரூ.47,661 கோடியிலிருந்து ரூ.84,884 கோடியாக அதிகரித்துள்ளது, இது 78% வளர்ச்சியாகும். இது சமூக செலவினங்களை குறைக்காமல் அடையப்பட்டுள்ளது. உண்மையில், கேரளா இப்போது அதன் வருவாய் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 60% கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம், உணவு மானியங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக செலவிடுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது, மேலும் இது இந்தியாவில் கிட்டத்தட்ட சுத்தமான நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரே பெரிய மாநிலமாக கேரளா இருப்பதாகவும் நியூஸ் க்ளிக் தெரிவித்துள்ளது.

வறுமை ஒழிப்பு என்பது ஒரு புள்ளிவிவரக் குறியீடு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் மீது விழும் சிறு வெளிச்சம். அப்படி, ஒரு குடும்பத்தின் தரத்தையே உயர்த்தும் ஒரு திட்டத்தினை கேரள அரசு செயல்படுத்துகிறது. ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் பாரதி.. ஆனால், தற்போது வரை உணவில்லாமல் நாளொன்றுக்கு ஒரு பொழுது மட்டுமே உணவுண்டு வாழும் மக்களும் இருக்கின்றனர்.. ஆனால், கேரளா இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற இருக்கிறது. இந்தியாவும் மாறட்டும்....