”என்ன தவம் செய்தேன்..” 10 ஆண்டுக்கு பிறகு இயக்குநராகும் எஸ்ஜே சூர்யா! Fans-க்கு நெகிழ்ச்சி பதிவு!
தமிழ் சினிமாவின் முக்கிய இரண்டு நடிகர்களான அஜித்தை வைத்து ’வாலி’, விஜயை வைத்து ’குஷி’ என இரண்டு படங்களை இயக்கி இரண்டையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. இரண்டு படங்களுமே அஜித், விஜய் இரண்டு பேருக்கும் மைல்கல் படங்களாக இன்றுவரை இருந்துவருகின்றன.
அதற்குபிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா, பின்புக்கு நடிகராக மட்டுமே திரையுலகில் வலம்வந்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் தான் ஏற்றுநடித்து எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் வெறித்தனமான நடிப்பை வெளிக்காட்டிய எஸ்ஜே சூர்யா ’நடிப்பு அரக்கன்’ என ரசிகர்கள் புகழும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் கவனம் பெற்றார்.
இந்நிலையில் 10 ஆண்டுக்கு பிறகு இயக்குநராக கம்பேக் கொடுக்கவிருக்கும் எஸ்ஜே சூர்யா, தன்னுடைய கனவுப்படத்தை இயக்கவிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு "கில்லர்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு. கன்னடம் மற்றும் இந்தி முதலிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கவிருக்கும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.
என்ன தவம் செய்தேன்..
எஸ் ஜே சூர்யாவின் கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் அதிகப்படியான வரவேற்பையும், எஸ்ஜே சூர்யா மீது அன்பையும் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் அதிகப்படியான அன்பில் திளைத்த எஸ்ஜே சூர்யா நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “என்னுடைய அனைத்து துறை நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் அன்பும் ஆருயிருமான என் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.
இயக்குநராக என்னுடைய புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியான பிறகு நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எனக்கு ஆதரவளித்து மிகுந்த அன்பைப் பொழிந்தீர்கள்... என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு. கில்லர் படம் குறித்த அப்டேட்களுக்கு காத்திருங்கள்” என பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.