KN Panikkar x page
இந்தியா

மாற்றத்தை விதைத்த மார்க்ஸிய அறிஞர்.. கேரள வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கர் காலமானார்!

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், மார்க்ஸிய அறிஞருமான கே.என்.பணிக்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காலமானார்.

Prakash J

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கேரள உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராகவும் பணியாற்றிய இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், மார்க்ஸிய அறிஞருமான கே.என்.பணிக்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், மார்க்ஸிய அறிஞருமான கே.என்.பணிக்கர் என்று அழைக்கப்படும் கண்டியூர் நாராயண பணிக்கர், குருவாயூர் அருகே தைக்காட்டில் கிருஷ்ணன் நாயர் மற்றும் இச்சுக்குட்டி அம்மா ஆகியோருக்கு 1936இல் பிறந்தார். சாவக்காடு வாரிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், இளங்கலைப் படிப்பை முடித்தபிறகு கேரளாவைவிட்டு வெளியேறினார். ராஜஸ்தான் பல்கலையில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அங்கு தனது கல்லூரித் தோழி (மறைந்த) உஷா பார்கவாவை மணந்தார். காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தராகவும் இருந்தார். காலனித்துவம், கலாசாரம், மதம், விவசாயிகள் இயக்கங்கள் மற்றும் வரலாறு குறித்து ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

KN Panikkar

ஜே.என்யுவின் வரலாற்று ஆய்வு மையத்தில் நவீன இந்திய வரலாற்றின் வலுவான துறையை உருவாக்கிய பிபன் சந்திரா, சப்யசாச்சி பட்டாச்சார்யா மற்றும் எஸ். கோபால் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றாசிரியர்களின் குழுவைச் சேர்ந்தவர் ஆவார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கேரள உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவராகவும் பணியாற்றிய இவர், இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய வரலாற்றை மதச்சார்பற்ற கோணத்தில் ஆவணப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கே.என்.பணிக்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காலமானார். இவரது மறைவுக்கு, கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது 90ஆவது பிறந்தநாளை (ஏப்ரல் 26 அன்று) சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாட KCHR தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.