கேரளாவில் தீபக் என்ற நபர், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார். வீடியோவை பகிர்ந்த இளம்பெண்ணுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக் என்று சொல்லப்படுகிறது. இவர் துணைக்கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். தன்னுடைய வேலை சம்பந்தமாக கடந்த 15ஆம் தேதி கண்ணூர் சென்ற அவர், பையனூரில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த தீபக், அருகிலிருந்து இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்ததாக சொல்லப்படும் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தன்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோ ஒன்றை தீபக்கிற்கு தெரியாமல் எடுத்து இணையத்தில் பதிந்துள்ளார். இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் மேலான வியூஸ்களை கடந்ததோடு, சம்பந்தப்பட்ட தீபக் என்பவர் மீது எதிர்மறையான கமெண்ட்களும், வசைபாடுதல்களும் எழ வழிவகை செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தசூழலில் தன்மீதான மோசமான பழியை பொறுத்துக்கொள்ள முடியாத தீபக், அவமானத்தால் அதிக மனஅழுத்தத்திற்கு சென்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தீபக்கின் மரணத்திற்கு வீடியோ பரப்பிய பெண்மீது புகார்கள் அதிகமானதை தொடர்ந்து இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை பதிவுசெய்துள்ளனர்.
பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் என்ற நபர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, வீடியோவை பகிர்ந்த பெண்மீது தான் தவறு என்றும், அவர் விளம்பரத்திற்காக இந்த குற்றத்தை செய்துள்ளார் என கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், தீபக் இறப்பதற்கு முன்பு வழக்கு தொடரும் எண்ணத்தில் இருந்தார் என அவருடைய நண்பர் கூறியுள்ளார்.
உயிரிழந்த தீபக்கின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஒன்மனோரமாவிடம் கொடுத்திருக்கும் தகவலில், ”இந்த வைரல் வீடியோவைப் பற்றி தீபக்கிடம் முதலில் தெரிவித்தது நான்தான். அவருக்கு இதுபோன்ற எந்த சம்பவமும் தெரியாதது போலவே பேசினார், நான் அதைப் பற்றி அவரிடம் சொன்னபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை அவர் நினைவில் வைத்திருந்திருப்பார். வீடியோ பரப்பப்பட்ட பிறகு அவர் மிகவும் வருத்தப்பட்டார். சனிக்கிழமை இரவு நாங்கள் இருவரும் கடைசியாக பேசியபோது, தான் குற்றமற்றவன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததால், அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் அளிக்க ஒரு வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்" என்று கூறியுள்ளார்.
மேலும் போலியான குற்றச்சாட்டுகளை எழுப்பிய பெண் வெளிநாடு செல்வதற்கு முன்பு அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தீபக்கின் நண்பர் வைத்துள்ளார்.