கஜேந்திர சிங், கீழடி, ஸ்டாலின் எக்ஸ் தளம்
இந்தியா

கீழடி விவகாரம் | ”ஏன் தயங்குறீங்க..” - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

”கீழடி குறித்து கூடுதல் தரவுகளைக் கேட்டால் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

Prakash J

பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற விவரங்களை கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது. இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்தக் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியது. தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

கீழடி

இவ்விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், “கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். தொல்லியில் துறையில் அரசியல்வாதிகள் ஏதும் முடிவு செய்ய முடியாது. இதில் தொல்லியல் நிபுணர்கள்தான் முடிவு செய்ய முடியும். இது அவர்களின் வேலை” எனத் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், ”கீழடி குறித்து கூடுதல் தரவுகளைக் கேட்டால் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின்ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

கஜேந்திர சிங் ஷெகாவத்

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடரவிரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.