mgr vs kcr
mgr vs kcr file image
இந்தியா

முதல்முறையாக சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்: ஹாட்ரிக் வாய்ப்பை கோட்டைவிட்ட கேசிஆர்! சறுக்கியது எங்கே?

யுவபுருஷ்

தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவான பிறகு நடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர்தான் சந்திரசேகரராவ் எனும் கே.சி.ஆர். தெலங்கானா ராஸ்டிர சமிதி கட்சியை தொடங்குவதற்கு முன்பே, கே.சி.ஆர் ஒரு பழுத்த அரசியல்வாதியாக மாறியிருந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1983ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர், சந்தித்த முதல் தேர்தலில் தோல்வியுற்றார். அதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த 4 தேர்தலில் தொடர்ச்சியாக வென்று எம்.எல்.ஏ ஆனவர், இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர், 2000 - 2001ம் ஆண்டு காலத்தில், துணை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதிகளில் இருக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், இதற்கு ஒரே தீர்வு, தெலங்கனா என்ற தனி மாநிலம் உருவாவதுதான் என்று முடிவெடுத்த கே.சி.ஆர் 2001ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி தெலங்கானா ராஸ்டிர சமிதி என்ற கட்சியை தொடங்கினார். தனி மாநிலம், அம்மக்களுக்கான நலன்கள் என்று தொடர்ந்து போராடி வந்ததன் நீட்சியாக கடந்த 2014ல் தெலங்கானா மாநிலம் உதயமானது. அதே ஆண்டு நடந்த தேர்தலில் 63 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தார் கே.சி.ஆர். அதுமட்டுமல்லாது, அடுத்து நடந்த 2018ல் நடந்த தேர்தலிலும் 88 தொகுதிகளை கைப்பற்றி முதல்வரானார்.

தென் மாநிலங்களில் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதல்வராக இருந்த எம்.ஜி,ஆருக்குப் பிறகு இவரும் தொடர்ச்சியாக முதல்வர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிராக அமைந்துள்ளது. அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தார் (தற்போது கஜ்வெல் தொகுதியில் முன்னிலை) . மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

குடும்ப அரசியல், ஊழல் புகார்கள், வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றாதது போன்ற காரணிகள்தான் கேசிஆர் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.