இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆலம் பாஷா(20). இவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தேசவிரோத வீடியோக்களைப் பரப்பியதாக ஆலம் பாஷா என்ற இளைஞரை, விஜயநகர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். பாஷா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளபோதிலும், அவர் காவலில் வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கையாக அவர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பாஷா விவகாரம் தொடர்பாக விஜயநகர் மாவட்ட காவல் துறையினர், “அவரை விசாரணைக்காக காவலில் எடுத்து, நிர்வாக மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினோம். அவர்மீது வழக்குப் பதியவில்லை. இது ஒரு தடுப்பு நடவடிக்கை மட்டுமே” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாஷாவின் செல்போனைக் கைப்பற்றிய போலீசார், அவர் வைத்திருந்த ஸ்டேட்டஸ்களை நீக்கியுள்ளனர். மேலும் பாலஸ்தீனம் சம்பந்தமாக அவர் ஏதாவது வைத்திருந்தாரா என ஆய்வு செய்துள்ளனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையின்போது, பாஷா, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்து சம்பந்தமான புகைப்படம் ஒன்றை மட்டும் வைத்திருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.